தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
தேனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பால் வியாபாரிக்குத் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள், ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை என்றும், இன்று காலை சிகிச்சைக்கு அழைத்து வருமாறும் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராஜேந்திரனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனை வாசலிலேயே உயிருக்கு போராடி வந்தார். இதனால், பதற்றமடைந்த உறவினர்கள், செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து காலதாமதமாக சிகிச்சையை துவக்கிய நிலையில் ராஜேந்திரன் உயிரிழந்தார். செவிலியரின் அலட்சியத்தால் ராஜேந்திரன் உயிரிழந்ததாக, உறவினர்கள் கானா விலக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசை தொடர்புக் கொண்டு கேட்டபோது, விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தது உறுதியானால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பதிவு செய்த நாள் : March 13, 2017 - 08:22 AM