கடந்த ஆண்டு மாணவர் ரோஹித் வெமுலா மரணமடைந்தது போல, இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
முத்து கிருஷ்ணன், வரலாறு பாடப்பிரிவில் எம்.பில். மாணவர் ஆவார். இவர் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டதைச் சேர்ந்தவர். ரோஹித் வெமுலாவைப் போல இவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் முத்துகிருஷ்ணன், ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்காக போராடிய இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக இருந்து வந்துள்ளார். மேலும் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வெள்ளிக் கிழமை (10-03-2017) அன்று அவருடைய முகநூல் பக்கத்தில் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் எம்.பில். மற்றும் பி.ஹெச்.டி. மாணவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்.பில். மாணவர்களுக்கான இறுதி வாய் மொழித் தேர்வில் சமத்துவம் இல்லாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்தான் தீவிர போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
news7