வெள்ளி, 14 ஜூலை, 2017

“மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" July 14, 2017

“மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்


தமிழகத்தில் ஜாதி ரீதியாக, மத ரீதியாக கலவரங்களை ஏற்படுத்த வகுப்புவாத கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதனை முறியடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் பிறந்தநாளையொட்டியும், அவர் அரசியலில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைவு கூறும் வகையிலும், சென்னை காமராஜர் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, தங்கள் வாழ்த்தினை திருநாவுக்கரசருக்கு தெரிவித்தனர். 

பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, திருநாவுக்கரசர் பற்றிய மலரை வழங்கிட திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அதனைப் பெற்றுக் கொண்டார். பின்னர் உரையாற்றிய வீரமணி, மதவாத சக்திகளுக்கு எதிராக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். 

அதனைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா, குமரி ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் திருநாவுக்கரசரை பாராட்டி உரையாற்றினர். பின்னர் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பிடித்த திருநாவுக்கரசர், அவருக்கு பிறகு ஜெயலலிதா அரசியல் சக்தியாக உருவெடுக்க வழிகாட்டியதாக இருந்ததை நினைவு கூர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஹிந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் நாடு வழிநடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். 

பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழகத்தில் மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் கலவரங்களை ஏற்படுத்த வகுப்புவாத கட்சிகள் முயன்று வருவதாகவும், இதனைத் தடுக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசும் போது, தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் குறுக்கு வழி மூலம் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ஆனால், மக்கள் சக்திக்கு முன்பாக, பாரதிய ஜனதாவின் திரைமறைவுத் திட்டங்கள் எடுபடாது எனவும் அவர குறிப்பிட்டார். 

நாராயணசாமியைத் தொடர்ந்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலைத் தாண்டி குடும்ப உறுப்பினரில் ஒருவரைப் போல் பேசவும், பழகவும் கூடியவர் திருநாவுக்கரசர் என பாராட்டினார். பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், மதவாத சக்திகளை முறியடிப்போம் என அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். 

இறுதியாகப் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநரை எதிர்த்து போராடவில்லை என்றும், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்த்து போராடுகிறார் என்றும் குறிப்பிட்டார். அரசியலுக்கு தற்போது வரும் இளம் தலைமுறையினர், பெருந்தலைவர்களைப் பார்த்து பிரமிக்கும் அதே நேரத்தில், ஆரம்ப காலத்தில் அந்த தலைவர்கள் கடந்து வந்த கடினமான சூழலையும் அறிய வேண்டும் என அறிவுறுத்தினார். 

Related Posts: