வியாழன், 27 ஜூலை, 2017

அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து ராம்ஜெத்மலானி விலகல்! July 26, 2017

அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து ராம்ஜெத்மலானி விலகல்!


டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இந்த வழக்கில் வாதாடியதற்காக, தனக்கு அளிக்க வேண்டிய 2 கோடி ரூபாய் கட்டணத்தை, முதல்வர் கெஜ்ரிவால் செலுத்த வேண்டும் என்றும் ஜெத்மலானி வலியுறுத்தியுள்ளார். டெல்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த ஊழல் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் தொடர்பிருப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மறுத்த ஜெட்லி, கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, விசாரணையின் போது, ஜெட்லி ஒரு கிரிமினல் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஜெட்லி தரப்பு, இந்த வார்த்தையை, வழக்கறிஞர் தாமாக முன்வந்து பயன்படுத்தினாரா? அல்லது கெஜ்ரிவால் அறிவுறுத்தலின் பேரில் பயன்படுத்தினாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதுதொடர்பாக ராம்ஜெத்மலானி அளித்த விளக்கத்தில், வழக்கு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது ஜெட்லியை, கெஜ்ரிவால் இதை விடக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததாக குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி, வழக்கு விசாரணையின் போது என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என தாம் எப்படி அறிவுறுத்த முடியும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார். இதனால், அதிருப்தியடைந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.