வியாழன், 27 ஜூலை, 2017

ஜெயலலிதா கைரேகை பதிவு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. பதிலளிக்க உத்தரவு! July 27, 2017

ஜெயலலிதா கைரேகை பதிவு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. பதிலளிக்க உத்தரவு!


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் ஏ.கே. போஸை அங்கீகரித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரேகைப் பதிவு செய்தது தொடர்பான வழக்கில், ஏ.கே.போஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுச் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அனைத்து ஆவணங்களுடன், மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்களையும் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உரிய பதிலளிப்பதற்கு ஏ.கே.போஸ் தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி கூடுதல் காலஅவகாசம் வழங்கினார்.