வெள்ளி, 28 ஜூலை, 2017

​பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பறிபோனது நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பதவி - பாக் உச்சநீதிமன்றம் அதிரடி..!! July 28, 2017




பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் சொத்துக்குவித்துள்ளது அம்பலமானதால் அவரின் பிரதமர் பதவியை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், அவரது மகள் மர்யம் ஷெரிப் நவாஸ் போலி ஆவணங்கள் தயாரித்தது அம்பலமானது.


வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையின் அறிக்கை அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நவாஸ் உள்ளிட்ட 4 பேரின் சொத்துக்கள் அவர்களது வருமானத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கையில் நவாஸின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் 2007 க்கு பிறகு பயன்பாட்டில் இல்லாத காலிபர் ஃபாண்ட் பயன்படுத்தி இருப்பதை வைத்து முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதையும் 2009 முதல் 2016 ம் ஆண்டு வரை விலை மதிப்புடைய பரிசுப்பொருட்களை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி இணையத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது. 

இந்த அறிக்கையை மையமாக வைத்து தான் பதவி விலக போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஆசிப் சையீத் கோஷா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்,   நவாஸ் செரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் நவாஸ் செரீப்பைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. நவாஸ் வழக்கில் தீர்ப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் உள்ள உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

பாகிஸ்தான் பிரதமராக 1990 - 1993, 1997 - 1999 ஆகிய காலக்கட்டங்களில் நவாஸ் செரீப் இருந்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் சொத்துக்கள் வாங்கியிருப்பது பனாமா ஆவணங்கள் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.