வியாழன், 27 ஜூலை, 2017

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா! July 26, 2017

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா!


பீகாரில், லாலு பிரசாத்துடனான மோதலை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கின. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களிலும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர். 

இந்நிலையில், தேஜஸ்வி ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அவரை பதவி விலகுமாறு நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த கோரிக்கையை லாலு ஏற்காததால், இரு கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை இன்று சந்தித்த, முதலமைச்சர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீஹார் மக்களின் நலன் கருதியே பதவியை ராஜினாமா செய்ததாகவும், கூட்டணி தர்மத்துகாகவே இதுவரை அமைதி காத்து வந்ததாகவும் நிதிஷ்குமார் கூறினார்.