வியாழன், 27 ஜூலை, 2017

நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும்! July 27, 2017




நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி தொகுதியில் திமுகவினர் தூர்வாரிய ஏரியை பார்வையிட சென்ற ஸ்டாலின் நடுவழியில் தடுத்துநிறுத்தி கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராயன் ஏரியை திமுகவினர் தூர்வாரினர். ஆனால் அந்த ஏரியில் இருந்து அதிமுகவினர் வண்டல் மண் எடுத்ததாக கூறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதனிடையே எடப்பாடி தொகுதியில் திமுகவினர் தூர்வாரிய ஏரியை இன்று பார்வையிட ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் சேலம் சென்றார். அப்போது கோவை கணியூர் சோதனைச் சாவடியில் மு.க.ஸ்டாலின் போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டார். பின்னர், மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து முக.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, கணியூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், சங்ககிரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.  இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரஜேந்திரன் தலைமையில் 800 திமுகவினர்  மறியலில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் பேருந்து முன்புற கண்ணாடி உடைந்தது. பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் மீது கோவை கருமத்தம்பட்டி போலீஸார் தடையைக் மீறி செல்லுதல் மற்றும் அரசாங்க ஊழியரின் கருத்தைக் கேட்காமல் போவது உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று கூறினார்.