வங்கிக் கணக்குகள், பண அட்டைகள் மற்றும் மற்ற வரவு செலவுகளைத் தாண்டி சமூக வலைதளங்களையும் சேர்த்து கண்காணித்து வரிவசூல் முறையைக் கொண்டு வர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வரி வருவாயை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ‘ப்ராஜெட் இன்சைக்ட்’ என்ற பிரம்மாண்ட தகவல் தொகுப்பு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 150 கோடி ரூபாய் செலவில் கடந்த 7 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மென்பொருள் மூலம் வருமான வரித்துறை கண்காணிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மென்பொருளில் குறிப்பிட்ட ஒரு நபரின் வங்கிக்கணக்கு விவரம், பண அட்டைகள், அவர் வேலை செய்யும் நிறுவனம், அவருக்கு நெருக்கமானவர்களுடைய கணக்குகள், பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கும். இதேபோல், ஒவ்வொரு மனிதருடைய கணக்கும் இணைக்கப்பட்டிருப்பதால் சங்கிலித்தொடர் போல இந்த கணக்குகள் பிணைக்கப்பட்டிருக்கும். மேலும், தனிநபர் அடையாள அட்டைகளின் விவரங்கள், ஆதார் விவரங்கள் இதனுடன் இணைக்கப்படும். குறிப்பிட்ட நபரின் சமூக வலைதள பக்கமும் இதில் கண்காணிக்கப்படும்.
இதன் மூலம் ஒருவர் புதிதாக காரோ, விலையுயர்ந்த நகை, அலங்காரப்பொருள் என எதையாவது வாங்கி அதை புகைப்படம் எடுத்து முகநூல், சுட்டுரை, இண்ஸ்டாகிராம் என எதில் பதிவிட்டாலும் அதன் வருவாய்மூலம் கண்காணிக்கப்படும். பணக்காரர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அதை விருந்துகள் வைப்பார்கள். அவற்றின் புகைப்படங்கள் இணையத்தில் ஏற்றப்படும். ஆனால், அவற்றின் பணமூலம் எத்தகையது என்பது சந்தேகத்திற்குரியது. இத்தகைய வருவாய் கணக்கில் வராத பணமாக இருந்தால் குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய முறை தற்போது அமெரிக்கா, கனடா, ஐக்கிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் உள்ளது. இதில் இந்தியா ஐக்கிய ஒன்றியம் (இங்கிலாந்து) பயன்படுத்தி வரும் ‘கனெக்ட்’ என்கிற மென்பொருள் மாதிரியை அடிப்படையாக வைத்து வரிவருவாய் கண்காணிக்கப்பட உள்ளது.
ஆதார் முறையில் தனிநபர் ரகசியங்கள் மீதான பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், வரி நடவடிக்கைகளுக்கு சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கவனிக்கும் வகையில் அரசு மென்பொருள் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.