குஜராத்தில் அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. 3 மாநிலங்களவை இடங்களுக்கான போட்டியில் காங்கிரஸ் சார்பில் ஒரு இடத்துக்கு அகமது பட்டேல் போட்டியிடுகிறார். மற்ற இரண்டு இடங்களிலும் பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இரானி போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் காங்கிரஸின் முக்கியத்தலைவரும், கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஷங்க்ரேஷ்சிங்க் வகீலா காங்கிரஸில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேலுக்கு எதிராக பாஜக வியூகம் அமைத்து வருகிறது. நேற்றும் இன்றும் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இவ்வாறு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ பல்வாந்த் சிங் ராஜ்புத்யே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மாநிலங்களவையில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக. இதனால், சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்லக்கூடிய அளவுக்கு முக்கியமான தலைவராக இருக்கும் அகமது பட்டேலின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.