திங்கள், 31 ஜூலை, 2017

2017 ஜூலை 31 தமிழக மக்களுக்கு கறுப்பு நாளா? July 31, 2017

2017 ஜூலை 31 தமிழக மக்களுக்கு கறுப்பு நாளா?


இன்றைய ஒரு நாளில் வெளியிடப்பட்ட மத்திய - மாநில அரசுகளின் உத்தரவு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகிய 4 உத்தரவுகள் தமிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது எனலாம்.

1...

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 85 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு இன்று காலை வெளியானது. 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீதம் இடங்களும், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு 15 சதவீதம் இடங்களும் வழங்கப்படும் என கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 14-ம் தேதி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. 

உடனடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2...

எஸ்.பி.ஐ வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.1 கோடிக்கும் குறைவாக பணம் வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி அதன் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.1 கோடிக்கும் குறைவாக சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் 0.5 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 3.5 விழுக்காடு மட்டுமே இனி வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3...

2018 மார்ச் 31 முதல், சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து என்று மத்திய அரசு வெளியிட்ட திடீர்  அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சிலிண்டர் விலையை மாதம் தோறும் 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 18 கோடியே 11 லட்சம் பேர், மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலை சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை வாங்கும் பொதுமக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரத்துசெய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், சிலிண்டர் விலையை மாதம் தோறும் 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

4...

உணவு பாதுகாப்பு சட்டத்தின் புதிய விதிமுறைகள் மத்திய அரசிதழிலில் வெளியிடப்பட்டது. புதிய விதிகளின்படி, வீட்டில் ஒருவர் வருமான வரி செலுத்தும் குடும்பம், மாதம் ரூ.8,333-க்கு மேல் ஊதியம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேசன் பொருட்கள் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே, இந்த திட்டத்தை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது என்னும் நிபந்தனை அடிப்படையில் செயல்படுத்தப் படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச அரிசி என இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர், உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்தார்.