கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்றும் நாளையும் (ஜூலை 10 மற்றும் ஜூலை 11) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பின் 80 சதவிகிதம் 90 மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரளாவில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஜூலை 10 மற்றும் ஜூலை 11 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துகள், மதுபான விடுதிகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பில் கேரளா தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 30,25,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 13,772 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 14,250 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/full-curfew-in-kerala-today-and-tomorrow.html