தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே முற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து சிவகளை எனும் பகுதியிலும் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தின் மேற்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு பரம்பு, பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த பரம்பில் ஏராளமான மண் தாழிகள் காணக்கிடக்கின்றன.
மேலும் மண் தாழிகள் அருகில் எலும்புகளும், குதிரையின் லாடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, இவற்றை வெளிகொண்டு வருவதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.