விலை மலிவான மற்றும் மிக குறைந்த எடையுள்ள செயற்கைக்கோளை சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
33.39 கிராம் எடை உள்ள இந்த செயற்கைக்கோள், உலகின் மிக மலிவான மற்றும் எடைகுறைவான செயற்கைக்கோள் என்னும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஹிந்த்- 1S என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், நாசா நடத்திய க்ரூப் இன் ஸ்பேஸ் என்ற போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் ரூபாய் செலவில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள ஜெய்ஹிந்த்- 1S செயற்கைக்கோளை, வானிலை ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும், அதனுள் பொருத்தப்பட்டிருகும் SD card மூலம் தகவல்களை data-வாக சேகரித்துக்கொள்ள முடியும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையை விட சிறிய அளவில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, வருகிற ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துவரும் ஹரிகிருஷ்ணா, அமர்நாத், சுதி மற்றும் கிரி பிரசாத் ஆகிய மாணவர்களின் கடும் முயற்சியால் ஜெய்ஹிந்த்- 1S செயற்கைக்கோள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.