செவ்வாய், 1 மார்ச், 2022

ஜூன் மாதத்தில் கொரோனா 4 ஆம் அலை உருவாகும் – ஐஐடி கான்பூர்

 28 1 2022 இந்தியாவில் கொரோனா தொற்றின் 4 ஆம் அலை ஜூன் 22 இல் தொடங்கி, ஆகஸ்ட் நடுப்பகுதி முதல் இறுதி வரை உச்சத்தை எட்டும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய மாடலிங் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரை மதிப்பாய்வு செய்யப்படாத இந்த ஆய்வறிக்கை, சமீபத்தில் MedRxiv என்கிற தளத்தில் வெளியானது. 4 ஆம் அலையின் தாக்கம் 4 மாதங்களுக்கு இருக்கும் என கணித்துள்ளனர்.

இந்த ஆய்விற்கு ஐஐடி கான்பூரின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் தலைமை தாங்கினர். 4 ஆம் அலையானது புதிய கொரோனா தொற்று காரணமாக ஏற்படாலம். அதே சமயம், அதன் தாக்கம் நாட்டில் தடுப்பூசி செலுத்தியதன் நிலையை பொறுத்தது என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நான்காவது அலை ஜூன் 22, 2022 இல் தொடங்கி, ஆகஸ்ட் 23, 2022 இல் உச்சத்தை அடைந்து, அக்டோபர் 24, 2022 இல் முடிவுக்கு வரும் ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸின் சாத்தியமான புதிய மாறுபாடு முழு பகுப்பாய்விலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோய்த்தொற்று விகிதம், இறப்பு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபாட்டின் தாக்கம் இருக்கும் என கூறுகின்றனர்.

இதுதவிர, முதல், இரண்டாம் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஆகியவை நோய்த்தொற்றின் பரவல் விகிதத்திலும், நான்காவது அலை தொடர்பான பல்வேறு சிக்கல்களிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.

அண்மையில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், ஒமிக்ரான் கடைசி கோவிட் மாறுபாடாக இருக்காது. அடுத்த திரிபு இன்னும் அதீத தொற்றுநோயாக இருக்கலாம் என்று எச்சரித்திருந்தனர்.

WHO இன் கோவிட் -19 தொழில்நுட்ப முன்னணி மரியா வான் கெர்கோவ் கூறுகையில், கொரோனா பெருந்தோற்றின் அடுத்த மாறுபாடு மிகவும் பரவக்கூடியதாக இருக்கும், ஏனென்றால், அது தற்போது பரவிக்கொண்டிருக்கும் மாறுபாட்டின் தன்மையை முந்தும் வகையில் இருக்கும் என்றார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பிப்ரவரி 3, 2022 க்குள் உச்சத்தை எட்டும் என இதே ஆராய்ச்சி குழு முன்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சியானது, மற்ற நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் வேகத்தை கணக்கிட்டும், இந்தியாவில் அதன் எழுச்சி பாதை எப்படியிருக்கும் என்பதையும் கணித்தனர்.

தற்போதைய ஆய்வில், நாட்டில் நான்காவது அலை ஏற்படுவதை முன்னறிவிப்பதற்காக, இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்பு தரவுகளுக்கு புள்ளிவிவர முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த முறையை , நான்காவது மற்றும் பிற அலைகளை கண்டறிய வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை பல நாடுகள் ஏற்கனவே சந்தித்துள்ளதாகவும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்ற சில நாடுகள் தொற்றுநோயின் நான்காவது அலையையும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட்-19 இன் மூன்றாவது அலை ஜிம்பாப்வேயின் தரவைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு கணிக்கப்பட்டது. மூன்றாவது அலை முடிவடையும் போது, கணித்தது சரியானது என்பது இப்போது தெளிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 8 ஆயிரத்து 13ஆக பதவாகியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/india-may-see-fourth-covid-wave-around-june-22-iit-kanpur-study-418246/