புதன், 2 மார்ச், 2022

சர்வதேச நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது? உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இதன் பங்கு என்ன?

 1 3 2022 

International Court of Justice : சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ள உக்ரைன், ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒரு பிரச்சனையில், இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய 1948 உடன்படிக்கையின் விளக்கம், விண்ணப்பம் மற்றும் நிறைவேற்றம் தொடர்பான” விளக்கம் கேட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் மாகாணங்களில் ஒரு இனப்படுகொலைக்கு சாத்தியமான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று ரஷ்யா கூறுவது முற்றிலும் தவறானது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் இந்த மாகாணங்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம் என்று உக்ரைனுக்கு எதிராக தன்னுடைய போரை துவங்கியுள்ளது ரஷ்யா என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

ஐ.நா.வின் தலைமை நீதி அமைப்பு தான் சர்வதேச நீதிமன்றம். ஐ.நாவின் சாசனத்தின் அடிப்படையில் இது 1945ம் ஆண்டு நிறுவப்பட்டு 1946ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு, நிரந்தர சர்வதேச நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்ற அமைப்பு முன்னோடியாக செயல்பட்டு வந்த இது லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. 1922ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் உள்ள ஹாக்கில் அமைந்திருக்கும் அமைதி மாளிகையில் தங்களின் முதல் அமர்வை நடத்தியது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் லீக் ஆஃப் நேஷன்ஸ் மற்றும் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் ஐ.நா மற்றும் சர்வதேச நீதிமன்றமாக மாற்றப்பட்டது. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் கலைக்கப்பட்டு அதன் கடைசி தலைவர், எல் சால்வேடர் நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஜோஸ் கஸ்டவோ குரேர்ரோ, சர்வதேச நீதிமன்றத்தின் முதல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இங்கு விசாரணைக்கு வந்த முதல் வழக்கு கோர்ஃபு கணவாய் விவகாரம் ஆகும். அல்பானியாவுக்கு எதிராக இங்கிலாந்து இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தது. ஐயோனியன் கடலில் கோர்ஃபுவின் க்ரீக் தீவிற்கும் ஐரோப்பாவின் அல்பானியாவுக்கும் நடுவே இந்த நீரிணை அமைந்துள்ளது.

இதன் பங்கும் பணியும்

நிரந்தர நீதிமன்றம் போன்றே, சர்வதேச நீதிமன்றமும் ஹாக்கில் உள்ள அமைதி மாளிகையை தலைமையாக கொண்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், செயலகம், பொருளாதார சமூக சபை மற்றும் அறங்காவலர் சபை என்று ஐ.நாவின் 6 முக்கிய உறுப்புகளில் ஐந்து நியூயார்க்கில் அமைந்திருக்க சர்வதேச நீதிமன்றம் மட்டும் நெதர்லாந்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

சர்வதேச சட்டங்களின் படி உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் புகார்களுக்கு தீர்வு காண்பது மற்றும் ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அமைப்புகள் கேட்கும் சட்டப் பூர்வமான கேள்விகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது போன்றவையே சர்வதேச நீதிமன்றத்தின் பணி என்று சொந்த விளக்கத்தை வழங்குகிறது நீதிமன்றம். நீதிமன்றம் நாகரீகத்தின் அனைத்து வடிவங்களையும், உலகில் உள்ள அனைத்து சட்ட அமைப்புகளையும் பிரநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் பதிவகம் தேவையான உதவிகளை வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்ச் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஐ.நாவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள். ஆனால் உறுப்பு நாடுகள் ஏதேனும் ஒரு விவகாரத்தில் சிக்கும் பட்சத்தில் தானாக நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்காது. இரு தரப்பினரும் ஒரு பிரச்சனைக்கு முடிவு காண விரும்பும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு தரப்பினர்களையும் இணைக்கும் ஒன்றாகவே இது இருக்கும். மேல் முறையீட்டிற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதிகபட்சமாக, விளக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு மாறுபட்ட கோணத்தின் மீது மறுபரிசீலனை செய்யப்படலாம்.

எவ்வாறாயினும், உறுப்பு நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்குவதை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லை. மேலும் நீதிமன்றத்தின் அதிகாரமானது அதன் உறுப்பு நாடுகள் தீர்ப்பை கடைபிடிக்க தெரிவிக்கும் விருப்பத்தில் இருந்தே பெறப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள்

ஐ.நா பொதுசபை மற்றும் பாதுகாப்பு சபைகளில் தனித்தனியாக நடைபெறும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 15 பேர் 9 ஆண்டுகள் நீதிபதிகளாக செயல்படுவார்கள். ஒருவர் தேவு செய்யப்பட வேண்டும் எனில் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். பல கட்டங்களாகவும் இவை நடைபெறும். ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் போது, நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா.தலைமையகத்தில் நீதிபதிகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.

மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளுக்கான தேர்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல்களில் தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பதவி ஏற்பார்கள். நீதிமன்றத்திற்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் ரகசிய வாக்கெடுப்புகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் பணி காலம் 3 ஆண்டுகள் ஆகும். நீதிபதிகள் மறு தேர்வுக்கு தகுதியானவர்கள்.

இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தால்வீதர் பண்டாரி, தலைமை நீதிபதி ஆர்.எஸ் பதக் மற்றும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நாகேந்திர சிங் ஆகியோர் நீதிபதிகளாக தேர்வு செய்யபப்ட்டனர். தல்வீர் 2012ம் ஆண்டு முதல் அங்கே நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ். பதக் 1989 – 91 காலகட்டங்களில் நீதிபதியாக செயல்பட்டார். நாகேந்திர சிங் நீதிபதியாக செயல்பட்டது மட்டுமின்றி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக 1976 – 79 ஆண்டுகளிலும், தலைவராக 1985-88 ஆண்டுகளிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்பாக அரசியல் சாசன சபையின் ஆலோசகராக பணியாற்றிய சர் பனேகல் ராவும் 1952 – 53 காலகட்டங்களில் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டார்.

சர்வதேச நீதிமன்றத்தை நாடிய இந்தியா

இந்தியா 6 பல்வேறு தருணங்களில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. 6-ல் 4 முறை பாகிஸ்தான் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

  1. இந்திய பிரதேசத்தில் செல்வதற்கான உரிமை (போர்ச்சுகல் vs இந்தியா – விவகாரம் 1960களில் உச்சம் பெற்றது)
  2. ICAO கவுன்சிலின் அதிகார வரம்பு தொடர்பான மேல்முறையீடு (இந்தியா v. பாகிஸ்தான், விவகாரம் 1972-ல் தீவிரம் அடைந்தது)
  3. பாகிஸ்தான் போர்க் கைதிகள் விசாரணை (பாகிஸ்தான் vs இந்தியா – விவகாரம் 1973-ல் தீவிரம் அடைந்தது)
  4. ஆகஸ்டு 10, 1999 வான்வெளியில் ஏற்பட்ட நிகழ்வு (பாகிஸ்தான் vs இந்தியா – விவகாரம் 2000-ல் தீவிரம் அடைந்தது)
  5. அணு ஆயுதப் போட்டி நிறுத்தம் மற்றும் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் (மார்ஷெல் தீவுகள் vs இந்தியா, 2016)
  6. குல்புஷான் ஜாதவ் விவகாரம் (இந்தியா vs பாகிஸ்தான் 2019



  7. source https://tamil.indianexpress.com/explained/what-is-the-international-court-of-justice-418383/