01 10 2022
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை கார்ப்பரேஷன் நிர்வாகமாக மாற்றப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதனை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை முன்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது.
தற்பொழுது கார்ப்பரேஷன் நிர்வாகமாக மாற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிஎம்எஸ்,சங்கம் சார்பில் நிர்வாகிகள் அருள் சேவியர், பாஸ்கரன், எம்பிளாய்ஸ் யூனியன் நிர்வாகிகள் ஜெயபால் ஸ்ரீனிவாசலு, ஐஎன்டியூசி நிர்வாகிகள் வேதநாயகம், சுரேஷ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி தொழிற்சாலை மெயின்கேட் முன்பு தொழிலாளர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கார்ப்பரேஷன் முடிவை திரும்ப பெற வேண்டும், படைக்கலன் தொழிற்சாலைகளின் வளங்களை அழிக்கக்கூடாது, தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும், பாரபட்சமற்ற பிஎல்பிஐ உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் தொழிற்சங்கத்தினர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 படைக்கல தொழிற்சாலைகளில் ராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த 41 தொழிற்சாலைகளையும் மத்திய அரசு ஏழு யூனிட்களாக பிரித்து கார்ப்பரேஷனாக மாற்றியது.
இதுகுறித்து மத்திய தொழிற்சங்கங்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ஆகியோர் இடத்தில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்திய பேச்சு வார்த்தையில் இதில் பணி புரியக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும் அரசு தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள்.
மேலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி இலக்கு இல்லை என்றும், வரும் ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி அளவிற்கு உற்பத்தி இலக்கு ஈட்டப்படும் என கூறி வரும் நிலையில், அதனை செயல்படுத்தாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டில் உள்ள 41 தொழிற்சாலைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு போதிய ஆர்டர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த தொழிற்சாலை தொடங்கிய நாளிலிருந்து போனஸ் வழங்கி வந்தது. ஆனால் தற்பொழுது தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-gun-factory-workers-demonstration-519063/