சனி, 8 அக்டோபர், 2022

வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்துபவரா நீங்க… எச்சரிக்கை… எச்சரிக்கை…

 

வாட்ஸ்-அப்பில் இருந்து தரவுகள் எளிதாக திருடப்படுவதாக டெலிகிராம் நிறுவனர் பவேல் டுரோவ் விடுத்துள்ள எச்சரிக்கை பேசுபொருளாக மாறி இருக்கிறது. 

நாம் அன்றாட வாழ்க்கையில் உணவின்றி கூட இருந்துவிடலாம் போலும் ஆனால் வாட்ஸ்-அப் மற்றும் இணைய வசதிகள் இன்றி இருக்க முடியாத காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். காலையில் இருந்து இரவு துயில் கொள்ளும் வரையில் நம்மை ஆட்கொள்வது இவர்கள்தான். நம் அறிவையும், வளர்ச்சியையும் வளர்த்து கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வசதிகள் காலப்போக்கில் நம்மை அழிவை நோக்கி கொண்டு செல்லும் அச்சமும் எழுந்துள்ளது.

தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்கு எளிமையான வழி கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினால், அங்குதான் நாம் நமது பலவீனத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் நாம் அனைவரது தகவல்களும் உள்ளன. நாம் மனதில் விரும்புவதை நமக்கு இவர்கள் கண் முன் திரையில் கொண்டு வந்து விடுகிற அளவுக்கு நம்மை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். நமது ஆசையும், தேவையும் இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

இணையதளங்களில் வரும் அக்செப்டுகளால் நமக்கு ஆபத்து என்று தெரிந்திருக்கும் இந்த காலக்கட்டத்திலும் அதில் இருந்து வெளிவர முடியாதவர்களாகதான் நாம் இருக்கிறோம். வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் நமக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக மாறிவிட்டதா? அல்லது மாற்றிவிட்டோமா? என்ற கேள்விகளோடு பயணித்து வருகிறோம். ஆனால் இணையதளங்கள் மூலம் நம்மை பயன்படுத்தி மோசடி கும்பல் குதுகலத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் -அப் ஆரம்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடியவை என சொல்லப்பட்டது. இதனால், அதில் பல அப்டேட்டுகள் வர தொடங்கின. ஒவ்வொன்றும் நமக்கு பயன்உள்ளதாக இருந்ததால் அதனையும் நாம் ஏற்று கொண்டோம். ஆனால், வாட்ஸ்அப்பில் தான் எளிதாக தரவுகளை திருட முடியம் என தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார் டெலிகிராம் நிறுவனர் பவேல் டுரோவ்.


மகிழ்ச்சி, துக்கம், வறுமை, சோதனை, கடவுள் நம்பிக்கை என நம் உணர்வுகளை பகிரும் வாட்ஸ்-அப் இன்று நம்மை பயத்தில் ஆழ்த்தி விட்டது என்பது தான் அந்த செய்தி. வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் பல மோசடிகள் நடைபெற்று வருவதால், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல்துறை அதிகாரிகளையே இந்த கும்பல் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்களும் இங்கு நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. பணம் பரிமாற்றம் முதல் நம் உணர்வுகளை பரிமாறும் தளமாக உள்ள வாட்ஸ்-அப்பில் என்ன சதி நடந்து வருகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸப் செயலின் மூலம் எளிதாக ஹேக் செய்து பயனர்களின் தரவுகளை எளிதாக அணுக முடியும் எனத் தெரிவித்துள்ளார். டெலிகிராமை மட்டும் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தவில்லை வாட்ஸப்பில் இருந்து விலகி இருங்கள் என்றுதான் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலேயே வாட்ஸ்அப் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என பாவெல் பலமுறை அறிவுறுத்தியுள்ளார். வாட்ஸப் மீது பலமுறை விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். வாட்ஸ்அப் செயலியில் அடிப்படை மாற்றங்களை செய்யாவிட்டால் பாதுகாப்பாக இருக்காது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பாவெல்.
வாட்ஸ்அப்பில் பெரிய சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பின் மூலம் ஹேக்கர்கள் எளிதாக ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த முடியும் என அவர் அதிர்ச்சியளித்துள்ளார்.

இந்திய அரசாங்கமும் இது தொடர்பாக ஹேக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் வாட்ஸ் அப் தவிர்த்து பல செயலிகள் குறுஞ்செய்திகளையும், புகைப்படங்கள், வீடியோக்களை பகிருவதற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. மோசடிகளையும், தரவு திருட்டுகளையும் தடுக்க அரசு ஒருபுறம் முயற்சி செய்து வந்தாலும், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய எண்ணம் நமக்கு ஏற்படவேண்டும்.

அதேபோல், மக்கள் பயன்படுத்தும் செயலிகளை ஆராய்ந்து அரசு அனுமதி அளிக்கிறது. அதனால் அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே, எந்த வகையிலும் மக்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல், இணையதளங்களை பயன்படுத்துவோரும் நாம் நமது சுயவிவரங்களை ஒவ்வொரு நாளும் இலவசமாக யாருக்கோ விற்பனை செய்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு கவனமாக இதனை கையாள வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது..

-இரா.நம்பிராஜன்

 

source https://news7tamil.live/data-theft-from-our-whatsapp-warning.html