சனி, 8 அக்டோபர், 2022

சைவ, வைணவ சமயம் என நிர்வகிக்க வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

 8 10 2022 

இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமயம், வைணவ சமயம் என பிரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சாதி தீண்டாமையை கண்டித்து சங்கரன்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து விட்டு அரசியல் காய்களை நகர்த்த முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் என்றார். தவறு செய்தவர்கள் மீது ஊருக்குள் செல்லக்கூடாது என்ற வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து இருப்பதை முதலில் செய்திருந்தால் இந்த நிலை இன்று வந்து இருக்காது என்றார்.

பெட்டிக்கடைக்காரர் மட்டுமல்லாது ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் சமூக புறக்கணிப்பை ஏற்படுத்திய ஊர் நாட்டமைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சமூகப் புறக்கணிப்பு என்பது பெரிய குற்றம். குறிஞ்சான் குளம் பிரச்சனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இன்று அதை கண்காணிக்க தனி குழுவை அமைத்துள்ளார் என கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெற இருந்து ஆர்எஸ்எஸ் பேரணியை நிறுத்தி காட்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் தெலுங்கானா முதல்வர் என்னை அழைத்து அங்கே அடையாளப்படுத்தினார் என விளக்கமளித்தார். நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை அறிவு பரம்பரை என்ற அவர், எங்களுக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்லி சேர சோழ பாண்டியர் துணை தேவை இல்லை என கூறினார். நாங்கள் சனாதனத்தை தோல் உரித்து காட்டும் பேரியக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியாகவே உள்ளோம் என்றார்.

 

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றும், ஆனால் கடவுளை நம்புகிறவர்களை மதிப்பவன் என தெரிவித்தார். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களிடம் சாதி இல்லை. மதத்தின் மீது சமூகத்தின் பிரச்சனை இல்லை. நமது பிரச்சனை எல்லாம் சங்க பரிவார்கள் மீது தான் என்ற அவர் இந்து சமய அறநிலையத்துறையை பிரித்து சைவ சமயம், வைணவ சமயம் என்று நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்


source https://news7tamil.live/charity-sector-should-be-managed-as-saiva-and-vaishnavism-thirumavalavan-mp.html