ஞாயிறு, 13 நவம்பர், 2022

தமிழகம் 10% இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் இருந்தால் சட்டசிக்கல் ஏற்படாது – திருமாவளவன் கருத்து

 12 11 2022 

தமிழகம் 10% இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் இருந்தால் சட்டசிக்கல் ஏற்படாது – திருமாவளவன் கருத்து

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சமூகநீதிக்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.

ஆகவே, இதை தமிழக அரசு ஏற்கப்போவதில்லை, நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழக அரசின் சார்பில் அறிவித்திருக்கிறார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

ஒ.பி.சி.க்கு மாநிலத்தில் ஏற்கனவே 50% இடஒதுக்கீடு இருக்கிறது. மத்திய அரசாங்கத்தில் 27% இடஒதுக்கீடு இருக்கிறது. ஆகையால், தமிழகத்தில் 27% இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இல்லை.

பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் இடஒதுக்கீடு 15% ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் 18% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மத்திய அரசாங்கத்தில் பழங்குடியினருக்கு ஏழரை சதவீதம் இடஒதுக்கீடும், தமிழ்நாட்டில் ஒரு சதவீதமும் வழங்கப்படுகிறது.

எனவே, இடஒதுக்கீடு சம்மந்தமாக மத்திய அரசு நிறைவேற்றுகின்ற சட்டத்தை மாநில அரசு அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது, இந்த 10% இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிவடைந்தவருக்கு வழங்கப்படுகிற இந்த சட்டம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

எனவே, தமிழக அரசு இந்த 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இருக்கப்போவதில்லை”, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/viduthalai-siruthaigal-party-leader-thirumavalavan-opinion-of-economically-weaker-section-reservation-540741/