ஞாயிறு, 13 நவம்பர், 2022

ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

 

12 11 2022

சோனியா காந்தியின் கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை.. ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
ராஜிவ் கொலை தண்டனை கைதிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 6 பேரையும் விடுதலை செய்ய வெள்ளிக்கிழமை (நவ.11) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சோனியா காந்தியுடன் உடன்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபிஷேக் சிங்வி, “இந்த நடவடிக்கை நாட்டின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தீவிர கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், “ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாகக் கூறிய சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் முடிவுகளில் இருந்து கட்சியின் முடிவு வேறுபட்டதா எனக் கேள்விகள் எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சிங்வி, “எல்லாவற்றையும் விட சோனியா காந்தி தனது தனிப்பட்ட கருத்துகளுக்கு உரிமையுடையவர். ஆனால் மிகுந்த மரியாதையுடன், இதனை கட்சி ஒப்புக்கொள்ளவில்லை, எங்கள் கருத்தை தெளிவாகக் கூறியுள்ளோம்” என்றார்.

மேலும், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றும் அபிஷேக் சிங்வி கூறினார். தொடர்ந்து, இந்தக் கொலையாளிகளுக்கு அவர்களின் குற்றத்தின் தன்மையை மறந்து இதுபோன்ற நன்மைகளை நாங்களும் வழங்கியுள்ளோம்.
எனினும், அவர்கள் ஒரு முன்னாள் பிரதமரை வேண்டுமென்றே திட்டமிட்டு கொலை செய்தனர். “நாங்கள் அந்தக் கண்ணோட்டத்தில் நிற்கிறோம்.

ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரை, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் அடையாளம் ஆகியவை பிரதமரின் படுகொலையில் சிதைக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் இந்த விஷயத்தில் மாநில அரசின் கருத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கவில்லை” என்றார்.

மேலும் குற்றத்தின் தன்மை மற்றும் சாட்சியங்கள் இருந்தும் இவ்வளவு கொடூரமான குற்றவாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் எப்படி முயன்றதும் என்றும் கேள்வியெழுப்பினர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளர் மே மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தண்டனை கைதிகள் நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/party-disagrees-with-sonia-gandhi-says-congress-leader-abhishek-singhvi-on-release-of-rajiv-gandhi-assassination-convicts-540286/