சனி, 12 நவம்பர், 2022

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 11 11 2022

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன்  ஆகியோர்,  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர்.  இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.  மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள்  அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர். 

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதையடுத்து  பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும்  தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன்,  முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும்  விடுதலை செய்து உத்தரவிட்டது.

source https://news7tamil.live/rajiv-gandhi-assasination-case-all-6-convicts-are-acquitted-6-people-involved-in-rajivs-murder-case-acquitted-supreme-court-action-verdict.html