நாட்டில் நீதித்துறை மற்றும் ஊடகத்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் .
தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கொத்தூர் என்ற இடத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நீதித்துறை, ஊடகத்துறையினர் ஆர்எஸ்எஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவை சுதந்திரமாக செயல்படுவது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகபூர்வமான கட்சி என்று குறிப்பிட்ட ராகுல், ஆதிக்க மனப்பான்மை எங்கள் மரபணுவிலேயே இல்லை என்றார். அண்மையில் தங்கள் கட்சி தலைவர் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ராகுல், அதே போல் ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகளின் தலைவர்கள் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
சந்திர சேகர ராவ் தேசிய கட்சி தொடங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, சந்திர சேகர ராவ் விரும்பினால் சர்வதேச கட்சி கூட தொடங்கி, சீனா மற்றும் பிரிட்டன் தேர்தல்களிலும் போட்டியிடலாம் என்றும் ஆனால் பாஜகவை கொள்கை ரீதியாக காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று தெரிவித்தார். ஆளும் டி.ஆர்.எஸ். உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் ராகுல் காந்தி உறுதிபடக் கூறினார்.
ஓபிசி கணக்கெடுப்புக்கு ஆதரவு
சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் தெளிவாக இருப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்பிட்டார். ஓபிசி கணக்கெடுப்பை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்றம் அவர் வலியுறுத்தினார். இந்திய மக்கள் தொகை எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது மக்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/congress-m-p-rahul-gandhi-attacks-trs-and-assures-to-save-the-system-in-judiciary-and-media.html