வியாழன், 3 நவம்பர், 2022

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதிக்கு மனு… எதிர்க்கட்சிகள் கையெழுத்திட தி.மு.க அழைப்பு

 ஆளுநரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதிக்கு மனு… எதிர்க்கட்சிகள் கையெழுத்திட தி.மு.க அழைப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் எனக் குற்றம்சாட்டி வரும் தி.மு.க, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கையொப்பமிட அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்க உள்ள பொது மனுவில் கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சிகளை தி.மு.க கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் நடந்து வருகிறது. சனாதனம், இந்து மதம், திருக்குறள், பட்டியல் இனத்தவர் போன்ற விஷயங்களில் ஆளுநர் ஆர்.என். ரவி கருத்துக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத தி.மு.க மற்றும் தி.மு.க-வின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க பொருளாளரும், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, தி.மு.க மற்றும் தி.மு.க-வின் தோழமை கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத உள்ளோம்.

தி.மு.க.வின் கருத்தில் உடன்படுகின்ற ஒத்த கருத்துடைய உறுப்பினர்கள், அந்த அறிகையை படித்துப் பார்த்து கையொப்பமிட தி.மு.க-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூட்டு மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தாத நிலையில், இந்த மௌவில் கையெழுத்திட காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக, பா.ஜ.க-விடம் இருந்து உயர் பதவியைப் பெறவே ஆளுநர் கருத்து தெரிவிக்கிறார் என்று தி.மு.க கூட்டணி தலைவர்கள் விமர்சனம் செய்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஆளுநர்கள் இப்போது யாரும் இல்லை. 2014 முதல் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் மோசமானவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் அலுவலகத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் வேளையில் தி.மு.க-வின் இந்த கடிதம் வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர்களின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான செயல்களுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரளாவிலும், இடது முன்னணி அரசாங்கம் கவர்னர் ஆரிப் முகமது கானுடன் கடுமையான மற்றும் பகிரங்கமான மோதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநர் பதவி தேவையற்றது என்று கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-invites-opposition-parties-mps-to-sign-joint-memorandum-calling-for-dismissal-tn-governor-535319/