வியாழன், 1 டிசம்பர், 2022

சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?

 

1 12 2022

சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தற்போது பார்க்கலாம்.

கிரிப்டோ உள்ளிட்ட கரன்சிகள் வெளிப்படைத்தன்மை இல்லாததால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஏமாற்றப்பட்டனர். இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்திற்கு வந்து மக்களின் சேமிப்பை பதம் பார்த்தது தொடர்கதையாக இருந்து வந்தது. இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில், இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கியானது Central Bank Digital Currency (CBDC) என்ற துணை நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் பணத்தை வெளியிடுகிறது. முதலில் பெரு நிறுவனங்களின் வர்த்தக பயன்பாட்டுக்காக நவம்பர் மாதம் மொத்த பரிமாற்ற விற்பனை சந்தை பிரிவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மாதத்தில் சில்லரை பண பரிமாற்றத்திற்கும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. இந்நிலையில், இன்று சோதனை அடிப்படையில் சில்லரை பணபரிமாற்றத்திற்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் வெளியிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணமானது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளதால் பணம் யாரிடம், எவ்வளவு இருக்கிறது, எங்கிருந்து வந்தது, எங்கு செல்கிறது என அனைத்தையும் கண்காணிக்க முடியும். ((மொத்த விற்பனை சந்தையில் பயன்படுத்த e₹-W எனவும் , சில்லரை பண பரிமாற்ற சந்தையில் பயன்படுத்த e₹-R எனவும் குறிப்பிடுகிறது. ))

முதற்கட்டமாக டிஜிட்டல் ரூபாய் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கியிலும் அறிமுகம் செய்யப்படும். முதலில் மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் அறிமுகமாகும் என ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் பரிமாற்றத்தை வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வேலெட் வாயிலாகச் செலுத்தவும், பெறவும் முடியும். மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வழியிலான பரிமாற்றத்தை, தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும். வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலெட்-க்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். இதேபோல் டிஜிட்டல் ரூபாயை பொதுவாகப் பயன்படுத்தும் கணக்கிற்கு மாற்றப்படும் போது சாதாரண ரூபாய் கிடைக்கும். டிஜிட்டல் ரூபாய்க்கு வட்டி கிடைக்காது.

டிஜிட்டல் ரூபாய் வெளியிடுவதால் பணத்தை அச்சிடுவது முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செலவுகளையும் சேமிக்க முடியும். பண பரிமாற்ற அமைப்பை பெரிய அளவில் மேம்படுத்த முடியும். குறிப்பாக நாடுகள் இடையிலான பண பரிமாற்றத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

டிஜிட்டல் ரூபாய் மூலம் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு போன்ற அரசுக்கு தலைவலி கொடுக்கும் அனைத்தையும் தீர்க்க முடியும். டிஜிட்டல் பணம் குறித்த அனைத்து செயல்பாடுகளின் மொத்த தரவுகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.


source https://news7tamil.live/digital-rupee-in-retail-what-are-the-advantages.html