18 12 2022
காவி என்பது ஒரு நிறம். அதை ஒரு இயக்கத்திற்குச் சொந்தம் கொண்டாடுவது தவறு என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் என்ற ஆவணப்படம் சென்னையில் உள்ள மினி உதயம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திமுக துணைபொதுச் செயலாளர் கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆவணப்பட திரையிடலுக்கு பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த துரை வைகோ, ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்பான கேள்விக்கு.. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர். இந்த தற்கொலைகள் இனி நடக்கக் கூடாது என்பதற்காக தான் தமிழ்நாடு அரசு அவசர சட்டம்
இயற்றியது. இந்த சட்டம் தொடர்பாக ஆளுநர் கேள்வி எழுப்பியதற்கு தமிழ்நாடு
அரசும் உரிய பதில்களை வழங்கியது என்றார்.
மேலும், இதுவரை ஆளுநர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. 20க்கும் மேற்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆன்லைன் விளையாட்டால் வாரத்திற்கு இரண்டு மரணங்கள் வரை நிகழ்கிறது மனிதாபிமான அடிப்படையில் கூட அவர் இதற்கு செவிசாய்க்கவில்லை என கூறினார்.
அத்துடன், வாரிசு அரசியலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளது தொடர்பான கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.அவரை ஜெயிக்க வைத்தது யார்? மக்கள் அவரை தேர்ந்தெடுக்கும் போது எப்படி அவரை வாரிசாக பார்க்க முடியும். பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களின் மகன்கள் வட மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சராக கூட இருக்கிறார்கள். கிரிக்கெட் போர்டை கண்ட்ரோல் பண்ணுபவர் அமித் ஷாவின் மகன். எனவே வாரிசு அரசியலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என துரை வைகோ பேசினார்.
மேலும், தீபிகா படுகோன் ஆடை சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, காவி என்பது ஒரு கலர். அதை ஒரு இயக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவது தவறு. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சில மாநிலங்களில் கூறி வருகிறார்கள். நிறைய திரைப்படங்களில் கருப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிக்கிறார்கள். அப்பொழுது திராவிடர் கழகத்தினர்
வில்லன்களா? சினிமா துறையை பொறுத்தவரைக்கும் சுதந்திரமாக அவர்கள் படம்
எடுக்க வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தோடு படத்தை தடை செய்ய சொல்வது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல என கூறினார்.
அதை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு, அதற்கான பணிகளை இன்னும் தொடங்கவில்லை ஆனால் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஏப்ரல் மாதத்தில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் முழுவதும் முடிந்தபின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறும். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெறும் என கூறினார்.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு இதில்
தனிப்பட்ட முறையில் பெரிய நாட்டம் கிடையாது. கடந்த முறை சட்டமன்றத்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள் ஆனால் நான் நிற்கவில்லை. ஆனால்
தலைமை மற்றும் நிர்வாகிகள் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். நான் தேர்தலில்
நிற்கப் போவதை முடிவெடுப்பது தலைமை தான். நான் நிற்கவில்லை என்றால் உடனே இதை பைட் எடுத்து அன்று அப்படி சொன்னார் இன்று இப்படி சொல்கிறார் என்று போட்டு
விடுவீர்கள் எனவும் துரை வைகோ தெரிவித்தார்.
source https://news7tamil.live/saffron-is-a-color-it-would-be-wrong-to-attribute-it-to-a-movement-sector-veco-obsession.html