8 2 23
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களவையில் செவ்வாய்கிழமை உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கெளதம் அதானியுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய பல கருத்துக்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மொத்தத்தில், ராகுல் காந்தி தனது 53 நிமிட உரையின் போது கூறிய 18 கருத்துகள் நாடாளுமன்ற அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர், பிரதமரிடம் கேட்ட சில கேள்விகள் அடங்கிய தனது உரையின் வீடியோ கிளிப்பை ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார். “பிரதமரே, ஜனநாயகத்தின் குரலை உங்களால் அகற்ற முடியாது. இந்திய மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதானி குழுமத்தின் அதிர்ஷ்டம் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தனது உரையில் குற்றம் சாட்டினார். அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களில் அதானியுடன் பிரதமரின் தொடர்பு குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளும் அடங்கும். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை உணர்த்தும் சில புகைப்படங்கள் மற்றும் அவர்களின் உறவு மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த ஆண்டுகளிலிருந்தே உள்ளது என்று ராகுல் காந்தி வாந்திட்டார்.
அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களில் மும்பை விமான நிலையம் தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளும் அடங்கும். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமான நிலையம் பற்றி ராகுல் காந்தி கூறியதை விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது, பெரு முதலாளித்துவத்தில் ஒரு மாதிரி ஆய்வாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“2019-ம் ஆண்டில் மும்பை விமான நிலையத்தில் பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமத்தின் முயற்சிகளை ஜி.வி.கே குழுமம் கடுமையாக எதிர்த்து, நீதிமன்றத்திற்குச் சென்று, அதன் கூட்டுப் பங்குதாரர்களான பிட்வெஸ்ட் மற்றும் ஏ.சி.எஸ்.ஏ-வை வாங்குவதற்கு நிதி திரட்டியது. ஆகஸ்ட் 2020-ல், சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜி.வி.கே தனது மிக மதிப்புமிக்க சொத்தை அதானி குழுமத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜி.வி.கே மீதான சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை என்ன ஆனது? மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்த பிறகு அவர்கள் எப்படி அதிசயமாக காணாமல் போனார்கள்? இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையத்தை விலக்கி வைக்க நிர்பந்தித்த குழுவை பாதுகாக்க ஜி.வி.கே மீது அழுத்தம் கொடுக்க அந்த வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றனவா?” என்று ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி குழுமத்திற்கு இஸ்ரேலிடம் இருந்து சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பங்களாதேஷுடன் மின் விநியோக ஒப்பந்தம், மற்றும் அதானி கார்ப்பரேட் குழுமம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) கடன் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு தொழிலதிபர்களுக்கு ஆதரவாக பிரதமர் சாதகமாக அழுத்தம் கொடுத்தார் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களில் அடங்கும்.
அதானி குழுமம் இலங்கையில் மின் திட்டத்தில் ஈடுபட்டது பற்றிய சர்ச்சையைப் பற்றிய அவரது குறிப்பும் அதானியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அவரது கேள்விகளும் நீக்கப்பட்டது.
மேலும், ரமேஷ் கூறுகையில், “அதானி குழுமம், குறுகிய காலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களை இயக்கும் நிறுவனமாக 2019-ம் ஆண்டில் அரசாங்கம் வழங்கிய ஆறு விமான நிலைய சலுகைகளில் 6 நிறுவனங்களில் வெற்றி பெற்றது. மேலும், 2021-ல் பிரச்னைக்குரிய சூழ்நிலையில், இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை அதானி நிறுவனம் கைப்பற்றியது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ரமேஷ், “2006-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜி.எம்.ஆர் மற்றும் ஜி.வி.கே குழுமங்களுக்கு முறையே டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை 30 ஆண்டுகளுக்கு இயக்க சலுகைகளை வழங்கியது. நவம்பர் 7, 2006 அன்று, ஒவ்வொரு ஏலதாரரும் அனுபவம் வாய்ந்த விமான நிலைய ஆபரேட்டருடன் கூட்டு சேர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தனியார்மயமாக்கலை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இரண்டு நிகழ்வுகளிலும் ஜி.எம்.ஆர் முதலிடம் பிடித்திருந்தாலும், போட்டியின் நலன்களுக்காக இரண்டு விமான நிலையங்களையும் அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது” என்று அவர் கூறினார்.
“2019-ம் ஆண்டில், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், 50 ஆண்டு காலத்தில் ஒரு வருடம்கூட விமான நிலையங்களை இயக்கிய அனுபவம் இல்லதா அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.” என்று ரமேஷ் கூறினார்.
நிதி ஆயோக்கின் குறிப்பை சுட்டிக் காட்டி பேசிய ரமேஷ், “போதுமான தொழில்நுட்ப திறன் இல்லாத ஏலதாரர் இந்த திட்டத்தை பாதிக்கலாம் மற்றும் அரசாங்கம் வழங்க உறுதிபூண்டுள்ள சேவைகளின் தரத்தை சமரசம் செய்யலாம்” என்று கூறினார்.
“பிரதமர் அலுவலகம் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவிற்கு தலைமை தாங்கிய நிதி ஆயோக் தலைவர் இந்த பரிந்துரையை புறக்கணித்து, அனுபவமில்லாத அதானி குழுமத்தால் 6 விமான நிலையங்களைப் பெற ஏன் உதவினார்கள்?” ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
“டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார்மயமாக்கியது போல், ஆபத்தை குறைக்கவும் போட்டியை எளிதாக்கவும் ஒரு ஏலதாரருக்கு 2 விமான நிலையங்களுக்கு மேல் வழங்கக்கூடாது” என்று பொருளாதார விவகாரங்கள் துறையும் கடுமையாக பரிந்துரைத்துள்ளதாக ரமேஷ் வாதிட்டார்.
“இருப்பினும், அரசாங்கம் அதன் கூட்டாளிகளுக்கு உதவும் அவசரத்தில், இதுவும் அரசால் புறக்கணிக்கப்பட்டது, அதானி குழுமம் இத்துறையில் ஒரு மெய்நிகர் ஏகபோகத்தை உருவாக்குவதற்கான வழியை உருவாக்கி, இந்த முன் நிபந்தனையை தள்ளி வைக்குமாறு அதிகாரமளிக்கப்பட்ட செயலர் குழுவிற்கு யார் அறிவுறுத்தியது?” என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhis-remarks-on-pm-adani-links-expunged-what-removed-from-records-590621/