திங்கள், 27 பிப்ரவரி, 2023

வன்முறையை தூண்டும் பேச்சு;

 27 2 2023

சமீபத்தில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் பாபு என்கிற ராணுவ வீரர் குடும்பத் தகராறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க கவுன்சிலர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, முன்னாள் ராணுவத்தினரை உள்ளடக்கிய ஒரு உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், ராணுவ வீரர்கள் வெடிகுண்டுகள் வைப்பதில் கை தேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என்று மிரட்டல் விடுத்தார். அவரது பேச்சை செய்தியாளர்கள் கண்டித்தும், ‘ஆமாம் வெடிகுண்டு வைப்போம்’ வலுத்த குரலில் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக-வின் அண்ணாமலை, “கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சியின் தலைவர்கள் இருக்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எதற்கு இதை செய்கிறோம் எனில் பார்டரில் இருக்கக் கூடிய ஒரு ஒரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து ஒரு உரக்கமாக ஒரு செய்தியை சொல்லுகிறோம். அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம்.

உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்கள். மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும். எதற்கும் பயப்படாமல் பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரனும் கூட இந்தியன் ஆர்மியில் இந்த பேட்சைப் போட்டுகிட்டு சொல்வீர்கள்.” இவ்வாறு அவர் பேசியது நீண்டு செல்கிறது.

‘அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்’: திருமாவளவன்

பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், அவரது வன்முறையை தூண்டும் பேச்சுக்கு அவரை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை பேசும் வீடியோவின் சிறிய பகுதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?

மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 23 ஆம் தேதி ) நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில், ‘தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின் 


source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-annamalai-should-be-arrested-vck-thol-thirumavalavan-tamil-news-599795/