செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” – மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

 27 2 23

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா கைது குறித்து பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், மணீஷ் சிசோடியா கைது என்பது எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக எப்படி தவறாக பயன்படுத்துகிறது எனபதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு இதுவாகும். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறுகையில், பிரதமர் மோடி – தொழிலதிபர் அதானி இருவரின் பிணைப்பு பற்றிய மக்களின் கவனம் திசைதிருப்பப்பட வேண்டும் என்பதற்காகவே மணீஷ் சிசோசியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


source https://news7tamil.live/the-arrest-of-sisodia-is-an-attack-on-democracy-says-pinarayi-vijayan.html