திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஏற்றுமதியில் உயர்வு – மறுமலர்ச்சியை நோக்கி திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்

 பின்னலாடை ஏற்றுமதியில் ஏற்பட்ட உயர்வால், திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்கள் சரிவிலிருந்து வளர்ச்சியை நோக்கி புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தினால், முன்னதாக நூல் விலை அதிகரித்து, திருப்பூர் ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சரிவைச் சந்தித்தன.

இரண்டு ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கொரோனாவும், ஆடை உற்பத்தியாளர்களை வாட்டி வதைத்தது. பணியாளர்கள், தங்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தபோதிலும், நிதி பற்றிய அச்சங்களும் அவர்களுக்குள் அதிகரித்தன. இதுமட்டுமல்லாமல், பங்களாதேஷ், வியட்நாம், தாய்லாந்து போன்ற போட்டி நாடுகள், அவற்றின் ஆடைகளுக்கான விலையை குறைத்ததால், நம் நாட்டு ஆடைகளுக்கான தேவை பாதிக்கப்பட்டது.


இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் வால்மார்ட் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்கள், திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளன. இதனால், இந்த ஆண்டு ஐனவரி மாதத்தில், பின்னலாடை ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் 11.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரூ.33.68 ஆயிரம் கோடியிலிருந்த திருப்பூரின் ஏற்றுமதி, ரூ.34.18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

“தேவை குறைந்த போது, நூற்பு ஆலைகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தன. வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கின. இப்போது, வாரத்தில் ஏழு நாட்களும் அவை இயங்குகின்றன. வால்மார்ட் நிறுவனம், ஜனவரி முதல் ஆர்டர்களை உயர்த்தத் தொடங்கியுள்ளது. 80 முதல் 100 கோடி வரை ஆர்டர்கள் வந்துள்ளது” என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சிவசுவாமி சக்திவேல் தெரிவித்தார்.

இவ்வாறு திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்கள், தங்களின் மறுமலர்ச்சி காலத்தில், அடியெடுத்து வைத்துள்ளனர். சரிவிலிருந்து மீண்டு, புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 63 சதவிகிதம் அமெரிக்காவுக்கும், 29 சதவிகிதம் ஐரோப்பாவுக்கும், 9 சதவிகிதம் இங்கிலாந்துக்கும் செல்வது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/rise-in-exports-tirupur-garment-manufacturers-towards-revival.html