26 2 23
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கழகக் கட்சிகளும் வீடுகள் தோறும் டோக்கன்களை வழங்கி தங்க நாணயம், வெள்ளித்தட்டு, வெள்ளி அகல் விளக்குகள் என பரிசுமழை பொழிந்து வாக்காளர்களைத் திணறடித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் தென்னரசுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வாக்காளர்களுக்கு பரிசுமழை பொழிவதில் கடும்போட்டியில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க சார்பில் அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பரப்புரை ஆகியவற்றை கவனித்து வருகின்றனர். அதே போல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பலரும் பரப்புரை ஆகியவற்றை கவனித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் என்றாலே அந்த தொகுதி மக்களுக்கு பரிசு மழைத் திருவிழா என்று எழுதாத இலக்கணமாகி விட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலிலும் தி.மு.க-வினரும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வினரும் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி வாக்காளர்களுக்கு பரிசுமழை பொழிந்து வருகின்றனர். முதலில் வேட்டி, சேலை பணம் பரிசு என்று போய்க் கொண்டிருந்த நிலையில், அதிக வாக்குகளை வாங்கிவிட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன், தங்க நாணயம், வெள்ளித் தட்டுகள், வெள்ளி அகல்விளக்குகள் என்று வாக்காளர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கி தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கழகங்களுமே வாக்காளர்களைத் திணறடித்துள்ளனர்.
வீடுகள் தோறும், வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ,3000 வழங்கப்பட்டுள்ளது. அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பாக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஒரு வாக்குக்கு ரூ.2,000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அகல்விளக்கு, வெள்ளி டம்ளர், பேன்ட், சட்டை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2வது நாளாக சனிக்கிழமையும் பட்டுச்சேலை, வெள்ளி அகல்விளக்கு, வெள்ளித் தட்டு உள்ளிட்ட பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் இரண்டு வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்புப் பரிசு வழங்கப்படும் என இரண்டு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கச்சேரி சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது. அன்னை சத்யா நகர், பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் தங்க மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது. தங்க நாணயம், தங்க மூக்குத்தி வழங்கியது வாக்காளர்கள் இடையே பரபரப்பையும் ஏதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் ஒருவருக்கொருவர், உங்கள் பகுதியில் டோக்கன் கொடுத்தாங்களா? தங்கக் காசு கொடுத்தார்களா? என்று பரிசு மழை பற்றி மகிழ்ச்சியாக கேட்டுக்கொள்கிறார்கள்.
தி.மு.க தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரூ.3,000 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் போக்க, அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரே வகையான பொருளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பொருள் என்பதும், எப்போது வழங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், தங்களது வாக்குச்சாவடியில் வாக்குகளை அதிகரிக்க பல்வேறு பரிசுகளை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சிலர் தங்கக்காசு மற்றும் மூக்குத்தி வழங்கியிருக்கலாம். அதிக வாக்குகளை பெறுவதில் அமைச்சர்களிடையே போட்டி நிலவுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.முக தரப்பில் வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு இன்று பரிசு வழங்கப்படவுள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், ஆடி ஆஃபர் போல, தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கழகங்களும் வாக்காளர்களை பரிசு மழையால் திணறடித்து வருகிறார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/erode-east-by-polls-dmk-and-aiadmk-gift-rains-pouring-on-voters-gold-coin-silver-candle-etc-599820/