15 2 23
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டள்ளது. இதற்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார்.
மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை சேகரிக்கும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டன. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா