திங்கள், 13 பிப்ரவரி, 2023

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழி

 

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. கனிமொழி தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன திருச்செந்தூர் – அமலி நகரை சேர்ந்த மீனவர்கள் திரு. அஸ்வின் மற்றும் திரு. பிரசாத் ஆகியவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தோப்பூர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தையும்
நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைக்கப்படவுள்ள அறைகலன் பூங்காவிற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் மடத்தூரில் கட்டப்படவுள்ள ESIC மருத்துவமனையின் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையயடுத்து தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய விருதளிப்பு விழாவில் பங்கேற்று, எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.அப்போது மேடையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி இன்று பாராளுமன்றம் என்பது கேள்விகள் கேட்க கூடாத இடமாகவும், பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு இடமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகள், குறைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும். ஆனால் கேள்வி நேரத்தில் கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியாத நிலைதான் நாடாளுமன்றத்தில் உள்ளது.

மதுரையில் அமைந்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்டால், அவர் மிகவும் அச்சுறுத்தும் விதமாகத்தான் பேசுகிறார். கயிறு கழுத்தை நெரிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு மத்திய அமைச்சரின் பதில் இருக்கிறது என்றால் இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளளாம் நாட்டில் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இறுகிறது என்று. இதேபோல் தான் நாட்டை ஆளும் பிரதமரின் செயல்பாடுகளும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது கேள்வி கேட்பதே தவறு என்பதுபோல் நையாண்டி செய்வது, அச்சுறுத்துவது போல் பேசுவது. ஆனால் கடைசிவரை நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் எந்த கேள்விக்கும் உருப்படியான பதில் யாரிடமிருந்தும் வராது என்பதுதான் உண்மை என பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கனிமொழி, ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சாரம் எந்த வகையிலும் கூட்டணி கட்சிக்கு பயன் தராது. தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பாஜக ஆதரவளிப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்காக போராடக்கூடிய திமுக ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தான் வெற்றி கிடைக்கும்.இலங்கை – தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். தொடந்து அதற்காக குரல் கொடுத்து வருகிறோம். இருநாட்டு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வுகாண வேண்டும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார் .

  • பி. ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/asking-questions-to-the-prime-minister-in-parliament-will-only-result-in-intimidation-m-p-kanimozhi.html