சனி, 25 பிப்ரவரி, 2023

மக்கா சோள பயிருக்கு ரூ.30 கொடு.. பருத்தி விலையை ரூ.100 ஆக உயர்த்து.. விவசாயிகள் கோரிக்கை

 

Farmers protest demanding proper purchase price for corn and cotton
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ 21.50 காசுக்கும், பருத்திக்கு 75 ரூபாயும் வழங்குகிறது.
படைப்புழு தாக்குதல் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் விலையும் குறைவாக வழங்கும்போது கூடுதல் பாதிப்பை தான் விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே பருத்திக்கு 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு 21 ரூபாயிலிருந்து 30 ரூபாயும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இது குறித்து தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பூவை விஸ்வநாதன் தெரிவிக்கையில்;
மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு உரிய லாபகரமான விலை கிடைக்கவில்லை, இதற்கு காரணம் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகிறார்கள்.

எங்களுக்கு மக்காச்சோளத்திற்கு விலை 30 ரூபாய் கொடுத்தால் தான் எங்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும்.
இன்றைய விலையில் 21 ரூபாய் 50 காசுக்கு எடுக்குகிறார்கள்.
அதேபோல் பருத்திக்கு கிலோ 100 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், வெறும் 75 ரூபாய்க்கு எடுக்கிறார்கள்.

கடந்த மாதத்தில் 90 ரூபாய் வரை பருத்தி எடுத்திருக்கிறார்கள். மக்காச்சோளம் கடந்த வருடம் இதே நாள் குவின்டாலுக்கு 2500 ரூபாய்க்கு எடுத்துள்ளார்கள்.
அப்படி என்று பார்த்தால் மக்காச்சோளம் விவசாயிகளையும், பருத்தி விவசாயிகளையும், விவசாயிகளின் அடி வயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள்.

இதில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து சிண்டிகேட் அமைத்து செயல்படும் அதிகாரிகள் மீதும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள் இவ்வளவுதான் விலை என நிர்ணயத்தால் அதிகாரிகள் அந்த விலைக்கு எடுக்கிறார்கள். அதற்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய மாட்டார்கள்.

வியாபாரிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.
மக்காச்சோளம் குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்தபடி எங்களுக்கு 13 முதல் 15 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் வெறும் 6 குவிண்டால் தான் கிடைக்கிறது.

எங்களுக்கு பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு மக்காச்சோளத்திற்கு கிலோ 30 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல பருத்திக்கு கிலோ 100 ரூபாய் வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம் மற்றும் பருத்தி எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து முறையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பெயரில் அங்கிருந்து சென்றனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

24 2 23


source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-protest-demanding-proper-purchase-price-for-corn-and-cotton-599183/