ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது

 சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டடம்
சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி மற்றும் சுப. வீர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு காவல்துறை அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் பஜனை பாடி போராட்டம் நடத்தினர்.

அப்போது காவல்துறையினரிடம் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது கீழ ரத வீதியில் கட்டப்பட்டிருந்த தி.க. கொடிகளை அகற்ற கோரி இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்து அமைப்பை சேர்ந்த மேலும் சிலர் கோவிலுக்குள் அமர்ந்து பஜனை பாடல்களை பாடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோயில் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்து அமைப்பினர் தாங்கள் இன்று சஷ்டி தினம் என்பதால் நான்கு ரத வீதிகள் பக்தி பாடல்கள் பஜனை பாடல்கள் பாடி வீதி உலா செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை இந்து அமைப்பினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

மேலும் வீரமணி பேசுகின்ற பொதுக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா ஓம் நமச்சிவாயா ஹர ஹர நமச்சிவாயா என்ற பக்தி கோசங்கள் எழுப்பியவாறு இந்து அமைப்பினர் திருக்கோயில் முன் மண்டபத்தில் அமர்ந்து நீண்ட நேரம் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இச்சம்பவத்தில் 72 ஆண்கள் ஒரு பெண் என 73 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் கோயில் வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

source https://news7tamil.live/protest-against-dravidian-league-meeting-at-shankaran-temple-hindu-organizations-arrested.html