செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுனராக நியமிப்பதா? புதுவையில் முத்தரசன் ஆவேசம்

 மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுனராக நியமிப்பதா? புதுவையில் முத்தரசன் ஆவேசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டத்தில் பேசப்பட்டது.

இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “புதுச்சேரிக்கு 23 சதவீதம் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 90 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும். இதற்காகத் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். புதுச்சேரியை புறக்கணிக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி என்று போஸ்டர் ஒட்டிக் கொள்ள மட்டும் அவர் பயன்படுகிறார். இதனால் அவரே மனவருத்தத்தோடு இருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுனரை எதிர்த்து குரல் கொடுக்கிறார். ஆனால் புதுச்சேரி முதல்வர் அப்படி இல்லை. முதலமைச்சர் என்றால் முதுகெலும்பு இருக்க வேண்டும். எந்த சாமி வேண்டும் என்றாலும் முதல்வராக இருக்கலாம். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இருக்க வேண்டும். மத்திய அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை‌ ஆளுநராக நியமிக்கிறது. விடுதலைக்காக எப்படி போராட்டம் நடத்தினோமோ. அதேபோல் ஆளுநரை ரத்து செய்ய போராட்டம் நடத்த வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டசபை இருந்தும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று கூறினார்.

மாநில செயலாளர் சலீம் தலைமையில் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில துணை செயலாளர் சேது செல்வம், சிபிஎம்யைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ரவிக்குமார் எம்,பி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/four-day-national-council-of-cpi-begins-in-puducherry-600373/