செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

 27 2 23

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்பட காரணமான டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள், கடை மீது கல்லெரிந்தும்,  இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அகிலாண்டபுரம் பகுதியில் , பழைய மருத்துவமனை சாலையில் 7685 எண் கொண்ட டாஸ்மாக் கடை  செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கடையை அகற்ற கோரியும் அப்பகுதி மக்கள் பலமுறை
போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால், அந்த கடை இன்றுவரை அகற்றப்படாத நிலையில் , கடந்த இரண்டு நாட்களுக்கு
முன்பு அதே பகுதியில் வசிக்கும் முசாபர் கனி என்பவர் , தனது வேலையை முடித்து வீடு
வந்தார். அப்போது, டாஸ்மாக் கடை முன்பு எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தர். பலந்த காயம் அடைந்த நிலையில்  சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த அவரது உடல் அரசு  அமரர் ஊர்தியில் சிவகங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் , அந்த வாகனத்தை   இறப்பிற்கு காரணமான டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆத்திரமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூட கோரி , கடையின் மீது கல்லெரிந்து போராட்டம் செய்ததுடன் கடையின் முன்பு உள்ள  சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து, அங்குவந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டம் , டாஸ்மாக் மேலாளர் வந்து கடையை அடைத்த பிறகே உடலை எடுத்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

கு. பாலமுருகன்


source https://news7tamil.live/womens-protest-demanding-closure-of-tasmac-shop.html