வியாழன், 16 பிப்ரவரி, 2023

நிலநடுக்கத்திற்கு பின் துருக்கி, சிரியா எதிர் கொள்ளும் சவால்கள்..!

 

16 2 23

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அந்த நாடுகள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.

துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை -ஐ கடந்து விட்டது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு  36 ஆயிரத்தை கடந்துள்ளதாக  அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் 200 மணி நேரம் கடந்தும்  மீட்பு படையினர் தொடர்ந்து  மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும் மீட்புப் பணிகளில் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகிறது. உலக வங்கி சார்பில் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கி யில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும்வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆபரேசன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

23 மில்லியன் மக்கள் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அனைவரும் மருத்துவ மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்தியா நிலநடுக்கம் ஏற்பட்டவுடனே மீட்பு குழுவினர் , உணவு மற்றும் மருத்துவ குழு, படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய குழுவை அனுப்பியது.

நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஐநா தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்கான ஐநா மன்றத்தின் தலைமை அதிகாரி மார்ட்டின் கிரிஃபித் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட வாய்ப்புள்ளது என கணித்துள்ளார். துருக்கிய அரசு கட்டடங்களை கட்டிய  113 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகிறது.

நீடிக்கும் மீட்பு பணி :

துருக்கி மற்றும் சிரியாவில் 230 மணி நேரத்தை கடந்த பிறகும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 200 மணி நேரம் கடந்த நிலையிலும் பேரிடர் மீட்பு படையினர்  கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதனையும் படியுங்கள் : சீனாவை வீழ்த்த இந்தியாவிற்கு கைகொடுக்குமா வெள்ளை தங்கம்?

இறந்த உடல்களின் துர்நாற்றம் :

நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கோர் பலியான நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டும் , படுகாயமடைந்த நபர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த மீட்கப்படாத இறந்த உடல்களில் இருந்து நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் துர்நாற்றம் பரவி வருகிறது.

துருக்கியின் அண்டாக்யா பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சலாம் அலாதீன் எனும் மீட்பு பணி வீரர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது..

“ என்னுடைய வாழ்நாளில் இத்தனை இறப்புகளையும் , பிணங்களை நான் பார்த்ததே இல்லை. இது பேரிடர் குறித்த ஹாலிவுட் திரைப்படமான அர்மேஜ்டன்( Armageddon ) எனும் திரைப்படத்தின் காட்சி போல் உள்ளது. இந்த மொத்த நகரமும் இறந்த உடல்களின் துர்நாற்றத்தால் நிரம்பி வழிகிறது” என்று கூறியுள்ளார்.

நிலநடுக்கத்திற்கு பின் பரவும் நோய்கள்:

துருக்கியில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியான பேடிர் பெர்டிகிளிசெவ் தண்ணீர் பற்றாக்குறையினால்  நீரினால் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி பல இடங்களில் இருந்து  மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நீர் மூலம் பரவும் நோய்கள், பருவகால காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதிகரிக்கும் பனிப்பொழிவும் – இருப்பிடங்கள் & கழிவறை பற்றாக்குறையும்:

 

நிலநடுக்கம் ஆரம்பித்த நாளில் இருந்தே மீட்பு பணி வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்து கடுமையான பனிப்பொழிவுதான். இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மேலும் திறந்த வெளி மைதானங்களில் டெண்ட் அமைக்கப்பட்டு, தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மீட்பு குழுவினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தில் இருந்து மட்டுமல்ல நிலநடுக்கத்திற்கு பிந்தைய நெருக்கடிகளில் இருந்தும் துருக்கி மற்றும் சிரியா மீள வேண்டும் என்பதுதான் இந்தியா உட்பட உலக நாடுகளின் விருப்பமாக உள்ளது.

– யாழன்

source https://news7tamil.live/challenges-faced-by-turkey-and-syria-after-the-earthquake.html