22 2 23
தஞ்சாவூர் அருகே தூர்வாருதல், மழையில் பாதிப்படைந்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினிடம் விவசாயிகள் மனு அளிக்கக் காத்திருந்த நிலையில், முதல்வர் மனு வாங்காமலேயே திருவாரூருக்குச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், முதல்வரின் செயழைல கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூருக்குச் சென்றார். அப்போது தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை முனியாண்டவர் கோயில் அருகே முதல்வர் செல்லும்போது, மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர்.
ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் வருகைக்காகக் காத்திருந்த நிலையில், தாங்கள் மனு கொடுக்கும் விவரத்தையும் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள், காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் கார் நிற்கவில்லை விவசாயிகள் இருந்த பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் மனு அளிக்க வந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து மனு வாங்காமல் சென்ற முதல்வரின் செயலை கண்டித்து மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், “டெல்டாவில் குறித்த நேரத்தில் ஆறு, பாசன வாய்க்கால், ஏரி உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும். மதகுகள், தடுப்பணைகள் ஆகியவற்றைச் சீரமைக்க வேண்டும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்திருக்கின்றனர்.
இதில் விடுப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். உடையார்கோயில் பகுதியில் 75 விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வரும் நிலத்தை மின்வாரியத்துறை பயன்பாட்டுக்காக அரசு கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. நன்றாக விளையக்கூடிய நஞ்சை நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம்.
குறித்த நேரத்துக்கு முன்னதாகவே நாங்கள் நின்ற இடத்தைக் கடந்து, முதல்வர் கார் நிற்காமலேயே சென்றது. எப்போதும் விவசாயிகள் சாலையோரத்தில் நின்றால் மனுக்கள் வாங்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த முறை நேரம் இருந்தும் மனு வாங்காமல் சென்றுவிட்டார். நாங்கள் மனு கொடுக்க வந்திருப்பதை முதல்வர் பயணத் திட்டத்தை கவனிக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
இந்நிலையில் முதல்வர் மனு வாங்காமல் சென்றது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மனு வாங்குவதற்கும் அதிகாரிகள் முறையான ஏற்பாட்டை செய்யத் தவறிவிட்டனர். இதைக் கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடத்தினோம்” என்றார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-stalin-convoy-in-thanjavur-to-thiruvarur-farmers-protest-598041/