ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்

 11 2 23

வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

தஞ்சை ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு தொழில்களின் பங்கு மிகவும் அதிகம். கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில்களில் பெரும்பகுதி முடக்கப்பட்டது. அவைகளுக்கான எந்த ஒரு சிறப்பு அம்சமும், அவற்றை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஜிஎஸ்டியை அதிக அளவு கட்டுபவர்கள், ஏழை எளியவர்கள் தான். அவர்களுக்கான எந்த நிவாரணமும் இதில் இல்லை.

பெரும் பணக்காரர்கள், செல்வந்தர்களுக்கான பட்ஜெட்டாக தான் மத்திய பட்ஜெட் உள்ளது. இருபது ஆண்டுகள் 8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், 5.6 சதவிகிதம்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் 7.5 ஆக வளர்ச்சி விகிதம் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு சதவிகிதம் வளர்ச்சி தற்போது குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.


source https://news7tamil.live/central-budget-is-of-no-benefit-to-the-development-of-small-and-micro-industries-p-chidambaram-accused.html