புதன், 15 பிப்ரவரி, 2023

அதானி விவகாரம்: 5 கேள்விகளுடன் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்

 

அதானி விவகாரம் தொடர்பாக 5 கேள்விகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.

அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன்பிறகு அதானி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனாலும் அவையில் பிரதமர் இந்த விவகாரம் குறித்து  விவாதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்த வகையில் அதானி குறித்து 5 கேள்விகளை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பியிருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை எனக் கூறி, 5 கேள்விகளை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் விருதுநகர் மக்களவை  தொகுதி உறுப்பினருமான மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மாணிக்கம் தாக்கூ,ர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து 5 கேள்விகளை ராகுல்காந்தி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வழக்கம் போல் அவர் பதில் சொல்லவில்லை. அதனால் மீண்டும் 5 கேள்விகளை கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று கூறினார்.

அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதானி குழும நிறுவனரான கெளதம் அதானியுடன் பிரதமர் இணைந்து மேற்கொண்ட மொத்த வெளிநாட்டு பயணங்கள் எத்தனை?,  கடந்த 8 ஆண்டுகளாக அதானியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு பிறகு  பிரதமருடன் சந்தித்தது எத்தனை முறை? உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

source https://news7tamil.live/congress-mps-letter-to-prime-minister-asking-questions-regarding-adani-issue.html