சனி, 18 பிப்ரவரி, 2023

அண்ணனுக்காக களம் இறங்கிய கனிமொழி;

18.02.23

நீ சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தால், வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்…’ என்று மு.க. ஸ்டாலினைத் தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க அமைச்சர்கள் யாராவது பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க எம்.பி. கனிமொழி தனது அண்ணனுக்காக பரிந்துகொண்டு பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தி.மு.க அமைச்சர்கள், தலைவர்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதே போல, அ.தி.மு.க தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

https://fb.watch/iL9w1auOKj/

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், பிரசாரம் செய்த அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, வாக்காளர்களை ஆடுமாடுகளைப் போல அடைத்து வைத்திருக்கிறீர்கள்.நீ சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தால், வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தா, எல்லோரையும் வெளியே விட்டு வாக்களர்களை சந்திக்கனும், திராணி இல்லை, தெம்பு இல்லை, எதிர்க்க சக்தி இல்லை. அண்ணா தி.மு.க-வை எதிர்க்க சக்தி கிடையாது.” என்று தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசி சவால் விடுத்தார். இதற்கு, அவர் ஆம்பளைதான் எல்லாம் இருக்கு. நீங்கள் காலில் விழுந்த கதை எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று கூறி பதிலடி கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “கிராமத்தில்தான் ஆடு, மாடுகளை எல்லாம் அடைத்து வைப்பார்கள். ஆனால், இப்போது நம்முடைய ஏழை வாக்காளர்கள் மக்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்திலே கொண்டு அவர்களை எல்லாம் ஒரு கொட்டகைப் போட்டு அமர வைத்திருக்கிறார்கள். வரும்போது பார்த்தேன். வாக்குகளை விலைக்கு வாங்கி அமர வைத்திருக்கிறார்கள். நீ சரியான ஆம்பளையா இருந்தால், மீசை வச்ச ஆம்பளையா இருந்தால், வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, சூடு, சொரணை, வெட்கம், மானம் எல்லோரையும் வெளியே விட்டு வாக்களர்களை சந்திக்கனும், திராணி இல்லை, தெம்பு இல்லை, எதிர்க்க சக்தி இல்லை. அண்ணா தி.மு.க-வை எதிர்க்க சக்தி கிடையாது. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு, இன்றைக்கு ஏழை மக்களை ஆங்காங்கே அழைத்து வந்து 120 இடத்துல கொட்டகை அமைத்து அமர வைத்திருக்கிறீர்கள். நான் பிரசாரத்துக்கு வந்ததுனால அவர்களுக்கு 2000 ரூபாய் கிடைச்சுருக்குது. தி.மு.க அமைச்சர்கள் பணத்தில் 2000 ரூபாய் ஏழை மக்களுக்கு போச்சு. அது எனக்கு சந்தோஷம். மகிழ்ச்சி. எப்படியோ மக்களுக்கு பணம் போய் சேரனும். மக்களை ஏமாற்றி மக்களிடம் இருது பிடுங்கிய பணம் ஏழை மக்களுக்கே போச்சு. மிக சந்தோஷம். ரெண்டு வேலை பிரியாணி கொடுக்குறாங்க, நல்லா சாப்புடுங்க, நிம்மதியா இருங்க. ஓட்டை மட்டும் 27-ம் தேதி தென்னரசுவுக்கு போட்டுடுங்க.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சொன்னார், எட்டிய தூரம் எல்லாம் அ.தி.மு.க காட்சி அளிக்கலனு சொன்னார். சரி காட்சி அளிக்கல இல்ல தானே. நீ ஏன் வாக்காளர் பெருமக்களை அடைச்சு வைக்கிற. நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள். என்னிக்கு நம்மைக் கண்டு அவர்களுக்கு பயம் வந்ததோ அன்னைக்கே நம் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

பயம் இல்லைனா, எதுக்கு வாக்காளர்களை அழைச்சுட்டு போய் பட்டியில அடைக்கிற மாதிரி, ஏழை மக்கள் வேதனைப் படுகிற அளவுக்கு, துன்பப்படுகிற அளவுக்கு, சிரமப்படுகிற அளவுக்கு அடைத்துவிட்டு மாலையில் விடுகிறீங்க. ஏன், உங்களுக்குதான் மக்களிடத்திலே செல்வாக்கு இருக்குதுனு சொல்றீங்க இல்ல. மக்களை ஏன் அடைச்சு வைக்குறீங்க? வெளியே விடுங்க. அவர்கள் வீட்ல இருக்கட்டும். எல்லோரும் போய் வாக்களர்கள் பெருமக்களைப் போய் பார்க்கலாம். முடியாது, பயம், அச்சம். தேர்தல் ஜுரம் வந்திருக்கு தி.மு.க-வுக்கு.” என்று கடுமையாகப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தி.மு.க அமைச்சர்கள் யாராவது பதிலடி கொடுத்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க மாநில துணைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மு.க. ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த கனிமொழி பேசியதாவது: “நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதியைப் பார்த்து, நீ வேட்டி கட்டியாக ஆணாக இருந்தால், மீசை வைத்த ஆணாக இருந்தால், இதற்கெல்லாம் பதில் சொல் என்று கேட்கிறார். எந்த மண்ணுல நின்னுகிட்டு இந்த கேள்வியை கேட்கிறீங்கனும் ஞாபகம் வைச்சுக்கனும். ஆண்மை அழிய வேண்டும். அந்த திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணிலே நின்றுகொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். அடுத்து எங்க அண்ணனைப் பார்த்து நீ கேட்கிற… நீ ஆண்மகனா? வேட்டி இருக்கா, மீசை இருக்கா, எல்லாம் இருக்கு எனக்கு தெரியும். நான் கேட்கிறேன். எங்கள் அண்ணன் தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக யார் காலில் விழுந்திருக்கிறார்? கவர்னரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேறச் செய்யக்கூடிய தைரியம் இருந்த தலைவர் தளபதி. யாருக்காகவும் பயந்ததில்லை. யாரைக் கண்டும் மிரண்டதில்லை. இங்கே உலகமே கண்டு பயந்துகொண்டிருக்கக்கூடியதாக சொல்கிறார்களே பா.ஜ.க-வை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய முதல் குரல், தமிழகத்தின் குரல், அது தளபதியின் குரல். எதற்கும் அஞ்சியதில்லை. பின்வாங்கியதில்லை. தன் கொள்கை தன் கொள்கைகளை எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. ஆண் மகனா? வேட்டி இருக்கா? சட்டை இருக்கா? என்று கேள்வியை அடுக்கிக் கொண்டிருக்கக் கூடிய பழனிசாமியிடம் கேட்கிறேன். நீங்கள் காலில் விழுந்த கதை எல்லாம். அத்தனைப் பேரும் பார்த்திருக்கிறோம். இன்னைக்குதான், ஜெயலலிதா இல்லைங்கறதுனால, தமிழ்நாட்டில் நிற்கும்போது கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி, முதுகெலும்பை நிமிர்த்தி பேசறீங்க. அண்ணாவுடைய பெயரை உங்கள் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல்னு பா.ஜ.க சொனனல் அதையும் தலையாட்டிக் கொண்டு ஆதரிக்கக் கூடியவர்கள் நீங்கள். நீங்க வந்து தைரியத்தைப் பற்றிப் பேசறீங்க. இப்படிப்பட்ட கேவலத்தை இந்த மண் சுமக்கக்கூடாது. அதனால், இந்தத் தேர்தலோடு, இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் ஒரு பாடம் புகட்டி வீட்டுக்கு அணுப்பனும்.. அது இந்த வித்தியாசத்திலே தெரிய வேண்டும். அ.தி.மு.க அதோடு அவர்கள் முதுகிலே ஏறி சவாரி செய்துகொண்டு தமிழ்நாட்டை பிடித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறதே பா.ஜ.க அவர்களுக்குமான பாடமாக இந்த தேர்தல் இருக்க வேண்டும்.” என்று எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துப் பேசினார். 


source https://tamil.indianexpress.com/viral/dmk-mp-kanimozhi-attacks-edappadi-palaniswami-video-goes-viral-595384/