வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பட்ஜெட்டில் புறக்கணிக்கப் பட்ட ஏழைகள்: ப. சிதம்பரம்

 22 2 23

பட்ஜெட்டில் புறக்கணிக்கப் பட்ட ஏழைகள்: ப. சிதம்பரம்

ஆளுங்கட்சியினரும், பட்ஜெட் தயாரிக்கும் நிதியமைச்சரும் தமது அரசின் திட்டங்களும் கொள்கைகளும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தப் பட்டே பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக பெருமை பாராட்டுவது காலங்காலமாக நடந்து வருவது தான். இதற்கு முக்கிய காரணம் இந்திய மக்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளே. வேலையில்லா திண்டாட்டம், உணவின் நுகர்வு, சுகாதார வசதிகளை, தனிநபர் வருமானம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் சில மாநிலங்களை தவிர பெரும்பான்மையான மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கின்றனர்.

இதில் சில தரப்பினரின் கணக்கீடுகளில் சில மாறுதல்கள் இருக்கலாம். தொற்று நோய் பரவிய ஆண்டான 2020- 21 காலத்தில் தொடர்ந்து உயர்ந்த பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் (நகர்ப்புறங்களில் 8.1, கிராமப்புறங்களில் 7.6 சதவீதம் போன்றவை நிலைமையை மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்கின. இந்த ஆண்டின் துவக்கமே மோசமாக இருக்கிறது. மிகப் பெரும் கார்ப்பரேட்டுகள் ஆயிரக்கணக்கில் தமது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருவதுடன், நடுத்தர வர்க்கத்தின் வேலை தேடும் படலமும் அதிகரித்து வருகிறது.

ஏழைகள் யார்?

நாட்டு மக்களின் வருமான விகிதத்தில் பெரும் மாறுபாடு நிலவுகிறது. இது பல உண்மைகளை சொல்கிறது. ஆக்ஸ்பார்ம் புள்ளிவிபரப்படி நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 60 சதவீதத்தை வெறும் 5 சதவீதத்தினரே தங்கள் வசம் வைத்துள்ளனர். மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் வருமான அடிப்படையில் வெறும் 3 சதவீத சொத்துக்களையே 50 சதவீத மக்கள் தங்கள் வசம் வசம் வைத்திருக்கின்றனர்.

2022-ல் தயாரிக்கப்பட்ட சான்சல், பிக்கட்டி கூட்டு அறிக்கையில் தேசிய வருமானத்தில் வெறும் 13 சதவீதத்தையே சுமார் 50 சதவீதத்தினர் வைத்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் சுமார் 7 முதல் 10 கோடி மக்கள் மட்டுமே திருப்தியாக செலவழித்து பகட்டான வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம். சொகுசு ரக காரான லம்போகினியின் 2023 ம் ம் ஆண்டுக்குரிய ஒதுக்கீடு முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. அடுத்த ஆண்டுக்கு கார் வேண்டுமென்றால் முன்பணம் கொடுத்து தான் அடுத்த ஆண்டு காரை வாங்க முடியும் என்பதே உண்மை.

இத்தனைக்கும் இந்த காரின் அடிப்படை விலையே 3.15 கோடியில் தான் தொடங்குகிறது. இந்த கார்களை வாங்குபவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்கள்.. சிஎம் ஐ இ புள்ளிவிபரங்கள் படி இந்திய தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 43 கோடியாகும். அதிலும் தற்போது வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருப்போர் சுமார் 42.23 சதவீதம். இது உலகிலேயே மிகக் குறைந்த வேலை வாய்ப்பு எண்ணிக்கை. மொத்தத்தில் 7.8 சதவீத மக்களுக்கு வேலை இல்லை. இதுவே தோராயமாக 2.1 கோடி.. 30 சதவீத மக்கள் தினக்கூலிகளாக இருக்கின்றனர். இந்த 13 கோடி மக்களின் மாதாந்திர நுகர்வு மொத்தமே 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவர்களை தான் நாம் ஏழைகள் என்கிறோம்.

இந்திய பெண்களில் 15 வயது முதல் 49 வரையிலான 57 சதவீத மக்கள் அனீமியா எனும் இரத்த சோகை நோயால் அவதிப்படுவதாக அரசின் தேசிய குடும்ப நல சர்வே என்ற புள்ளிவிவரம் சொல்கிறது. 11.3 சதவீத குழந்தைகளுக்கு முக்கியமாக 6 மாதம் முதல் 23 மதம் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே போதுமான உணவு கிடைக்கிறது. 31.1 சதவீத குழந்தைகள் போதுமான எடை இல்லாமல் இருக்கின்றனர். 35.5 சதவீத குழந்தைகள் போதுமான உயரம் இல்லாமல் இருக்கின்றனர். இரண்டும் இல்லாத குழந்தைகள் 19.3 சதவீதம். இவர்களில் மொத்தமாக மோசமான நலிவுற்ற குழந்தைகளின் சதவீதம் 7.7. எனவே போதுமான சத்துணவு கிடைக்காமல் அவதிப்படும் குழந்தைகள் தான் ஏழைகள். சதவீத தண்டனை பெறும் ஏழைகள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பித்தவர்களை கேளுங்கள். அவர்களை ஏழைகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள், கடைநிலையில் இருக்கும் 50 சதவீத மக்களுக்கு என்ன ஒதுக்கியிருக்கிறார்கள், வேலை இல்லாமல் திண்டாடும் மக்களுக்கு என்ன திட்டம் தீட்டி இருக்கிறார்கள், மக்களின் பசி தீர்க்க என்ன செய்திருக்கிறார்கள் என்று. இதற்கு அவர்கள் பதில் சொல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் அவர்கள் ஒதுக்கியிருக்கும் தொகையில் இருந்தே இதை நாம் தெரிந்து கொள்ளலாம்.ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய திட்டங்களுக்கு அரசு 2022-23 ம் ஆண்டில் ஒதுக்கிய தொகை கூட முழுவதுமாக செலவிடப்படவில்லை என்பதை இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை 2

வயிற்றில் அடிக்கும் அரசு

அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை முழுமையாக செலவிட்டால் தான் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். விலைவாசி உயர்வை ஒப்பிட்டால் கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையை விட அதிகமாக ஒதுக்கினாலும் அது குறைவான மதிப்பாகவே இருக்கும். ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கு கூட குறைவான தொகையையே இந்த முறை ஒதுக்கி உள்ளனர். பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் உண்மையில் இது குறைந்த ஒதுக்கீடு என்பது புரிய வரும். இது தவிர ஜி எஸ் டி குறைக்கப்படவில்லை. இந்த வருவாயின் 64 சதவீதம் 50 சதவீத ஏழை மக்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. எரிபொருட்கள் மீதான உற்பத்தி வரியை அரசு குறைக்கவே இல்லை. . தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பெண்களும், குழந்தைகளும் இரத்த சோகை நோயால் அதிகமாக அவதிப்பட்டனர். குழந்தைகள் நோஞ்சானாக ஆரோக்கியமின்றி இருப்பதை கூட உணராமல் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார் நிதி அமைச்சர்.

நிதி அமைச்சர் சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்த பட்ஜெட் உரையில் ஏழைகள் என்ற வார்த்தை இரண்டு முறை மட்டுமே உச்சரிக்கப் பட்டதில் வியப்பு எதுவும் இல்லை. இந்த பட்ஜெட் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழில்: த. வளவன்


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-on-budget-597751/