21 2 23
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அனு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குச் சென்றார். கடைசிவரை இந்த பயணம் ரகசியமாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் சென்ற அவர், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் இன்று அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அனு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2010ம் ஆண்டு அமெரிக்கா-ரஷ்யா இடையே அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2021ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் அதன்பிறகு இரு நாடுகளும் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தை நீட்டித்தது இந்தஅணு ஆயுத ஒப்பந்தம் 2026-ம் ஆண்டு காலவதியாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
source https://news7tamil.live/putin-suspends-russias-involvement-in-key-nuclear-arms-pact.html