வியாழன், 9 பிப்ரவரி, 2023

குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது வருந்தத்தக்கது- தயாநிதி மாறன் எம்.பி.

 

8 2 23

குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாததால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது எனக்கு தெரிந்து, இதுதான் முதல்முறை. இது மிகவும் வருந்தத்தக்கது என திமுக எம்.பி தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

பின்னர் இன்றைய அவை நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து கூறுகையில் திமுகவின் சார்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். அவர் பேசிய பிறகு நாடாளுமன்றத்தில் மக்களவையில் கோரம் இல்லை என்று கூறினேன். கோரம் என்றால், ஒரு குறிப்பிட்ட அவை நடக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 10 சதவீதமானவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவை நடத்தப்பட வேண்டும்.

 

ஆனால் இந்த முறை 5 சதவீதத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். குறிப்பாக ஆளும் பாஜகவின் உறுப்பினர்கள் கூட பிரதமரின் உரை முடிந்த பிறகு சென்று விட்டனர். இதில் வருத்தத்திற்குரிய நிகழ்வு என்னவென்றால் மூத்த அமைச்சர்கள் கூட யாரும் இல்லை. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்தார்.

source https://news7tamil.live/it-is-regrettable-that-the-lok-sabha-was-adjourned-without-even-minimum-members-dayanidhi-maran-mp.html