6 2 23
மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரையிடபட்டது. அப்போது மேடையில் பேசிய விடுதலை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்ததாவது..
வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள மோடியிசம் பிபிசி நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும் இருந்திருக்கிறது என்பதை பிபிசி ஆவணப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி, மோடி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்துள்ளார் . மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி.
சிலர் இதை கண்டுகொள்ளாமல் திமுக எதிர்ப்பையும், திராவிடர் கழகத்தையும் எதிர்த்து கொண்டு இருக்கின்றனர். நம் முன்னால் மிக மிக சவாலாக இருப்பது மோடியின் அரசியல் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மொழி வழி அரசியல் பெரிதாக பேசப்படுவதில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு அரசியல் வலுவாக
இருக்கிறது.
காதல், மதமாற்றம், புனித பசு என்ற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறைகள் தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியுள்ளது. மதசார்பின்மை என்ற ஒற்றை வார்த்தைக்காக ஒருவர் முதன்முதலில் கொல்லப்பட்டார் என்றால் அது காந்தியடிகள் தான்.
திமுகவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. மாறாக அது திரிபுவாதம். அப்படி செய்வது சனாதனத்திற்கு துணை போவதற்குச் சமம். பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல, சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம்
மோடி என்பவர் தனிப்பட்ட நபராக சக்தியாக வளர்ந்து நிற்கிறார் என்று நாம் எண்ண வேண்டாம். மக்கள் விரோத சனாதன கோட்பாடு அவருக்கு பின்னால் இருக்கிறது எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். “ என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
– யாழன்
source https://news7tamil.live/what-will-happen-to-this-country-if-modi-becomes-prime-minister-once-again-thirumavalavan-mp.html