வியாழன், 1 ஜூன், 2023

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 1 6 23

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முதன்முறையாக பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடகத்தின் நடவடிக்கை, காவிரி டெல்டா விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் அதனை உடைத்தெறிவோம் என்றும் காவிரிப் பாசன விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக கூறினார்.


source https://news7tamil.live/tamil-nadu-government-is-determined-not-to-build-meghadatu-dam-in-karnataka-chief-minister-m-k-stalin.html