வெள்ளி, 2 ஜூன், 2023

மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு..! மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டினார்!

 1 6 23

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

ன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது டெல்லி முதல்வரோடு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் , ஆம் ஆத்மி எம்பிக்களான சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ், கனிமொழி எம்பி, டிஆர்.பாலு எம்பி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு  ”The Glorious State of Tamilnadu ” என்ற தொகுப்பை வழங்கினார்.

ஜூன் 12 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தும்  பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி இடம்பெறும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது


source https://news7tamil.live/kejriwal-meeting-with-m-k-stalin-gathered-support-against-the-emergency-law-of-the-central-government.html