14 6 23
1956 ஆம் ஆண்டு அமலாக்கப் பிரிவு இந்தியாவில் நிறுவப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) ஆகிய இரண்டு நிதிச் சட்டங்களின் விதிகளை செயல்படுத்த இந்த பிரிவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
அமலாக்க இயக்குநரகம் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அமலாக்க இயக்குநரகம் மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய ஐந்து பிராந்தியத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
மண்டல அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, கொச்சி, டெல்லி, பனாஜி, கவுஹாத்தி , ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா ஸ்ரீநகர் போன்ற இடங்களில் உள்ளன. மண்டல அலுவலகங்கள் இணை இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.
அமலாக்கத்துறையின் முக்கிய பணி பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது பொருளாதாரக் குற்றத்தைத் தடுப்பது போன்றவை ஆகும். இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவதால் இந்த துறை அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.
1960 இல், நிர்வாக அதிகாரங்கள் பொருளாதார விவகாரத் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டன. 1973 முதல் 1977 வரை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் நிர்வாக அதிகார வரம்பில் அமலாக்க இயக்குநரகம் இருந்தது. அமலாக்க இயக்குனரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது.
அமலாக்க இயக்குநரகம் FEMA மற்றும் PMLA ஆகிய இரண்டு சட்டங்களை செயல்படுத்துகிறது. FEMA என்பது சிவில் சட்டம். பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் சந்தேகத்திற்குரிய மீறல்களை விசாரிக்கவும், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
PMLA என்பது ஒரு குற்றவியல் சட்டமாகும். இதில் பணமோசடி செய்பவர்களை கைது செய்து வழக்கு தொடுப்பதைத் தவிர, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை கண்டறிவதற்கும், தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/powers-and-functions-of-central-government-controlled-enforcement-directorate-696191/