நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும் – அதற்கு துணைபோகும் ஆளுநரைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
காலை தொடங்கி மாலை வரையிலான இப்போராட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கெடுத்தனர்.
நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல; அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கோரிக்கையல்ல; அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது சிலர்தான். ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்.
அரியலூர் அனிதா தொடங்கி – குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நாடாளுமன்றத்திலும் – சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் போராடி, அமைய இருக்கும் புதிய மத்திய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாநிலைப் அறப்போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாணவரணிச் செயலாளர் எழிலரசன், மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் ஆகியோருக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் போராட்டம் நமக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/the-time-when-the-barrier-to-neet-will-be-broken-is-not-far-chief-minister-m-k-stalins-statement.html